மற்றவை

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை:-

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியிடப்படும் என்று பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப்பேரவையில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியதாவது:-

ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை 5.1.2019 அன்று அரசிடம் அளித்துள்ளது. இவ்வறிக்கை அரசின் விரிவான ஆய்வில் உள்ளது. ஆய்விற்குப் பின் இப்பரிந்துரைகளின் மீது உரிய ஆணைகள் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களின் பணியாளர் அமைப்பினை மதிப்பாய்வு செய்து வருவாய் செலவினை குறைக்க அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக் குழு தனது அறிக்கையை அரசுக்கு அளித்த பின்னர் தற்போது பணியிலுள்ள பணியாளர்களின் நலன் சிறிதும் பாதிக்காத வண்ணம் உரிய முடிவுகளை அம்மாவின் அரசு மேற்கொள்ளும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் குறித்த மானியக் கோரிக்கையின் கீழ், ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறுகின்ற கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால பயன்களுக்காக இந்த நிதி ஆண்டில் 32,395.30 கோடி ரூபாய் நிதியும் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களுக்கு 20.42 கோடி ரூபாய் நிதியும் ஆக மொத்தமாக 32,415.72 கோடி ரூபாய் நிதி 2019-20-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஓய்வூதியத் திட்டங்களுக்காக 18.73 கோடி ரூபாய் நிதியும் அடங்கும்.

தற்போதுள்ள நடைமுறைகளுக்கு உட்பட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம், 2,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.