தற்போதைய செய்திகள்

நிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது – துணை முதலமைச்சர் பெருமிதம்…

சென்னை:-

நிதி மேலாண்மையில் தமிழகம் தலையாய மாநிலமாக திகழ்கிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில்  நிதித்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:-

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

பொருள் வரும் வழிகளை மென்மேலும் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், அதனைக் காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்
என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

நிதி ஈட்டுவது, ஈட்டிய நிதியை பயனுள்ள வழியில் செலவளிப்பது, தேவைக்குக் கடன் பெறுவது, அந்தக் கடனை கட்டுக்குள் வைத்திருப்பது, பெற்ற கடனைத் திருப்பித் தருவது, இத்தனைக்கும் மத்தியில் சேமிக்கவும் செய்வது ஆகியவை நிதி மேலாண்மையின் கூறுகள் ஆகும்.

தமிழ்நாடு அரசின் நிதித்துறை இக்கூறுகளை திறம்பட செயல்படுத்தி, நிதி மேலாண்மையில் தலையாய மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.மக்களுக்கு எதைச் செய்ய வேண்டும்,எப்படிச் செய்ய வேண்டும்,எப்பொழுது செய்ய வேண்டும்என்று திட்டமிட்டு செய்கின்ற ஆட்சியாகமாண்புமிகு அம்மா அவர்களது அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையில்அரசின் அனைத்துத் துறைகளுக்கும்,தேவையான அனைத்து நிதிகளையையும் நிறைவாக வழங்கி விரைவாக திட்டங்களை நிறைவேற்ற நிதித் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களும், அவர்களது வழியில் செயல்பட்டுவரும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு முனைப்பான நடவடிக்கையின் பயனாக தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கு நிதி ஆதாரங்களின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தேவைகளை மாநில அரசு தனது சொந்த வருவாய் வரவுகளிலிருந்துதான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த வரி வருவாய் வரவுகளில் மாநில அரசின் சொந்த வருவாய் 68 சதவீதமாகவும், சொந்த வரி வருவாய் 62 சதவீதமாகவும் உள்ளது. எனவே, மீதமுள்ள 32 சதவீதம் மட்டுமே மத்திய அரசிடமிருந்து நிதிப்பகிர்வுகளாகப் பெறப்படுகிறது. சொந்த வரி வருவாயிலிருந்து நிதி ஆதாரங்களைப் பெருக்குவதில் மாநில அரசிற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

மேலும், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறைக்கு பிறகு, மாநில அரசுகளின் வரி விதிப்பு அதிகாரங்கள் மேலும் குறைந்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவை வரி வசூலில், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டுள்ள போதிலும், மத்திய அரசிடமிருந்து 7,517 கோடி ரூபாய் அளவிலான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரி வருவாய் மற்றும் சரக்குகள் மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கான நிலுவைத் தொகையை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற வேண்டியுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவற்றை திறமுடன் எதிர் கொண்டு, வரும் அதே வேளையில் மாண்புமிகு அம்மா அவர்களது அரசு மேற்கொண்ட சீரிய மற்றும் தொடர் செயல்பாடுகளின் காரணமாக 2016-17-ம் ஆண்டில் 6.79 சதவீதமாக இருந்த சொந்த வரி வருவாய் வளர்ச்சி விகிதம், 2017-2018-ம் ஆண்டில் 9.07 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே அம்மா அவர்களது அரசின் திறமைக்கு சான்றாக அமைந்திருக்கிறது என்பதை இப்பேரவைக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த சில ஆண்டுகளாகவே, மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிதிப்பகிர்வால், தமிழ்நாடுதான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 14-ம் நிதிக்குழுவின் பரிந்துரைகளினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த அவையில் பல்வேறு தருணங்களில் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

மேலும், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் 75 சதவீதமாக இருந்த தனது பங்கை 60 சதவீதமாகக் குறைத்தது, மாநிலங்களின் நிதிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆண்டு ஒன்றிற்கு சுமார் 3,000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை இதன் விளைவாக ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, மெட்ரிக் படிப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்பு உதவித்தொகையின் திட்ட வழிகாட்டுதல்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தினால் தமிழக அரசின் நிதிச்சுமை ஓராண்டிற்கு 354 கோடி ரூபாயிலிருந்து 1,527 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஏற்பட்ட கூடுதல் நிதிச்சுமையினை தொடர்ந்து தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது.

செலவினங்களைப் பொறுத்தவரையில், சமீப காலமாக தமிழ்நாடு அரசு பல சவால்களைச் சந்தித்து வருகிறது. மத்திய அரசின் உதய் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் கடனான 22,815 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு தனது கடனாக ஏற்றுக்கொண்டதன் விளைவாக, தமிழ்நாடு அரசின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு கூடுதலாக 6,342 கோடி ரூபாய் வட்டித் தொகை கட்டுவதிலும் மானியம் வழங்குவதிலும் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதுடன், மின்பகிர்மானக் கழகத்தின் நட்டத்தில் அதிகரிக்கப்பட்ட பங்கையும் ஏற்க வேண்டியுள்ளது.

இவ்வாறான கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், தமிழ்நாடு அரசு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அரசு ஆண்டுக்கு ரூ.14,719 கோடி அளவிற்கு கூடுதல் செலவினத்தை ஏற்றுள்ளது. இதோடு மட்டுமல்லாது, அடுத்தடுத்து ஏற்பட்ட கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்ததன் காரணமாக, துயர் துடைப்பு பணிகளுக்காக எதிர்பாராச் செலவினத்தையும் அரசு மேற்கொண்டுள்ளது.

இவ்வாறான பல்வேறு சவால்களை சந்தித்து வந்தபோதிலும் மாநில அரசு திறம்படவும், சிறப்பாகவும் மக்கள் நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தி வருவதுடன், தமிழ்நாடு நிதிநிலைமை பொறுப்புடைமைச் சட்டம், 2003 -ன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிதிப் பற்றாக்குறையை மூன்று சதவீதத்திற்குள்ளாகவும் நிலுவைக் கடன்களை 25 சதவீதத்திற்குள்ளாகவும் பராமரித்து, இந்த அரசு நுட்பமாக நிதிநிலையை மேலாண்மை செய்து வருகிறது என்பதை இம்மாமன்றத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை ( குறள்-512 )

– என்கிறது திருக்குறள்

வருமானம் வரக்கூடிய வழிகளை அதிகப்படுத்தி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து, நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவர் என்ற வள்ளுவர் வாய் மொழிப்படி, பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதி நிலைமை பொறுப்புடைமையை கடைப்பிடிக்கும் அதே வேளையில், மக்கள் நலப் பணிகளை தொய்வின்றி சிறப்பாகச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக விளங்குகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.