தற்போதைய செய்திகள்

தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு…

சென்னை:-

தமிழக சட்டபேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28-ந் தேதி தொடங்கியது. அனைத்து துறை மானியக் கோரிக்கைகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்த துறைகளின் அமைச்சர்கள் பதிலளித்து
புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

வழக்கமான அலுவல்கள் முடிந்த பின்னர் பேரவை தலைவர் ப.தனபால் பேசியதாவது:-

பேரவை கூடிய 28 நாட்களில் 7 நாட்கள் மாலையிலும் அவை நடத்தப்பட்டது. இதன்படி மொத்தம் 164 மணி 39 நிமிடங்கள் அவை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கையில் 129 எம்.எல்.ஏ.க்கள் உரையாற்றினர். அவர்களில் 62 பேர் எதிர்க்கட்சியினர். ஆளும்கட்சியினர் 67 பேர் 21 மணி 25 நிமிடங்களும், எதிர்க்கட்சியினர் 33 மணி 49 நிமிடங்கள் பேசினர்.
எதிர்க்கட்சியினருக்கு கூடுதலாக 12 மணி 24 நிமிடங்கள் பேச நேரம் ஒதுக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 1.50 நிமிடங்கள் உரையாற்றினார். 49 நிகழ்வுகளில் அவர் விளக்கம் அளித்துப் பேசியிருக்கிறார். 6 சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், 124 கவன ஈர்ப்புகள் அவைக்கு கொண்டு வரப்பட்டன. 13 ஆயிரத்து 777 பார்வையாளர்கள் வந்து சென்றனர். 19-ந் தேதி சட்டசபையில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப் படம்
திறந்து வைக்கப்பட்டது.முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 94 எம்.எல்.ஏ.க்கள் அவை நடந்த அனைத்து நாட்களிலும் தவறாமல் பங்கேற்றனர். சட்டசபை 110-ம் விதியின் கீழ் 42 அறிக்கைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி படித்தார்.

இவ்வாறு பேரவை தலைவர் ப.தனபால் பேசினார்.

பின்னர் சட்டசபை கூடும் தேதியை குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். பேரவையில் இந்த தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து அவையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து பேரவை தலைவர் ப.தனபால் அறிவித்தார்.  மாலை 4.21 மணிக்கு பேரவை நிகழ்சிகள் முடிவடைந்தது.