தற்போதைய செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு – அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்…

கோவை:-

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நியூமோக்காக்கல் தடுப்பூசி மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவை கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய துறையில் குறுகிய காலத்தில் 2750 நபர்களுக்கு ஏஞ்சியோ சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தினந்தோறும் 5 முதல் 10 குழந்தைகள் எடை குறைவாக உள்ள காரணத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். 90-95 சதவிகிதம் அவ்வாறான குழந்தைகள் காப்பாற்றப்படுகிறார்கள்.
இருப்பினும் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஓராண்டு வரை கிருமித்தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய காரணத்தால் நோய் தொற்று வர மிகவும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறான நோய்களில் நிமோனியா எனப்படும் நோய் உயிர் கொல்லியாக கருதப்படுகிறது. அதனால் உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்படும் குழந்தைகளில் 20-30 சதவிகிதம் குழந்தைகள் பெற்றோர்களின் முறையான கூடுதல் பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு இன்மையினால் ஓராண்டுகளிலேயே உயிர் இழக்கிறார்கள். இதனால் 1 முதல் 5 வரை உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. எடை குறைவாக உள்ள குறைமாத குழந்தைகளின் உயிர்காக்கும் விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னுதாரணமாக திகழ்கின்றது. அதிலும் கோவை மாவட்டம் முதன்மை வகிக்கிறது.

இதுபோன்ற எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளை பாதுகாக்க தேசிய நல்வாழ்வு இயக்கம் நிமோனியா தடுப்பூசி இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் நீமோக்காக்கல் கிருமியினால் ஏற்படும் உயிர்க்கொல்லி நிமோனியாவை 95-100 சதவிகிதம் வரை தடுக்க இயலும். நியூமோக்காக்கல் நிமோனியா 13 வகையான நியூமோக்காக்கல் பாக்டீரியா உண்டாக்குகிறது.

இதன் தடுப்பூசி ஒன்றரை, இரண்டரை, 3 அரை மாதத்தில் கொடுக்கப்பட வேண்டும் . ஒரு ஊசியின் மதிப்பு ரூபாயில் 4000 ஆகும். இருப்பினும் சிறு குழந்தைகளின் நலம் காக்கும் அடிப்படையில் எடை குறைவாகவுள்ள அனைத்து குழந்தைகளின் தேசிய நல வாழ்வு திட்டம் தமிழக அரசு அறிவுறுத்தலின்படி கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் அளிக்கப்படுகிறது . குறை மாதத்தில் பிறந்த குழந்தை மற்றும் எடை மிகவும் குறைவாக உள்ள குழந்தைகள் கண்டிப்பாக போட வேண்டும்.

கருவுறும் தாய்மார்கள் தனது குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றெடுக்கவும் ஆரோக்கியமாக வளர்க்கவும் வசதியின்மை ஒரு தடையாக விளங்கக்கூடாது என்று நோக்கில் புரட்சி தலைவி அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டம்தான் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித்திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி கருவுற்ற தாய்மார்களுக்கு தலா ரூ.18ஆயிரம் வழங்கப்படுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரையில் 15267கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5.35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளின் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 16 வகையான குழந்தைகள் பராமரிப்பு பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் பரிசுப்பெட்டகம் 6660 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது. தொலை தூரங்களில் வசிக்கும் மக்களுக்காகவே இந்தியாவிலேயே முதன்முறையாக பச்சிளங்குழந்தைகளை தொடர் சிகிச்சைக்காகவும், உயர் சிகிச்சைக்காகவும் உடனடியாக அழைத்துச்செல்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 37 குழந்தைகளுக்கான சிறப்பு அவசர கால ஊர்திகள் செயல்படுகின்றன.

இவ்வாகனத்திலேயே இன்குபேட்டர், இன்ப்யூசன் பம்ப், வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர் , மல்டி பாராமானிட்டர் போன்ற அதிநவீன உபகரணங்கள் உள்ளது. மலைபிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கும் சிகிச்சை வழங்கும் வகையில் மக்களை நாடி மருத்துவசேவை என்ற முறையில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் சிறந்த தாய் சேய் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் காரணமாக 99.8 சதவிகிதம் குழந்தைகளின் பிறப்பானது மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றது. பெற்றோர்களும் குழந்தை பாராமரிப்பில் அரசு மருத்துவமனைகளையே நாடி தங்களது சேய்களின் நலன் காக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், இணை இயக்குநர் மருத்துவபணிகள் கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.