தற்போதைய செய்திகள்

சோளிங்கர் தொகுதியில் ரூ.2 ஆயிரம் கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை – அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி

வேலூர்

சோளிங்கர் தொகுதியில் ரூ.2 ஆயிரம் கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சோளிங்கர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா மற்றும் புதியதாக உதயமாகிய சோளிங்கர் தாலுகாவை அறிவித்த அம்மா அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. சோளிங்கர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெல்.ச.கார்த்திகேயன், சோளிங்கர் பேரூராட்சி கழக செயலாளர் எம்.ராமு, மாவட்ட இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஏ.எல்.விஜயன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., திரைப்பட நடிகையும், தலைமை கழக பேச்சாளருமான பசி சத்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர், தமிழ் நாட்டில் ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்கியவர் எம்.ஜி.ஆர். அவர் ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்தவர். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் மக்களுக்கு நல்ல சமுதாய கருத்துக்களை கூறினார். அவருடைய பாடல்கள், படங்கள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்க்கை பாடமாக இன்றைக்கும் அமைந்திருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பாடலை நம்நாட்டு மக்கள் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கருணாநிதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தயவால் முதல்வரானார்.

பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் எம்.ஜி.ஆர் திமுக கட்சியை தனது திரைப்படம் மூலமாகவும் உழைப்பாலும் வளர்த்தார்.11 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விளங்கினார். எம்ஜிஆர் அவர்கள் இருந்தவரை தீயசக்தி கருணாநிதி கோட்டை பக்கமே வர முடியவில்லை.

ஏழை எளிய மாணவ மாணவிகள் பசியாக இருக்கக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் உலகம் போற்றும் உன்னத திட்டமான சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். 11 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பொற்கால ஆட்சி நடத்தினார். தலைசிறந்த நிர்வாகியாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விளங்கினார்.

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆ.ர், வழியில் வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிளவு பட்ட இயக்கத்தை ஒன்றுசேர்த்து, இழந்த சின்னத்தை மீட்டு கழகம் என்ற பேரியக்கத்தை கட்டிக்காத்தார். 17 லட்சம் தொண்டர்கள் இருந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக மாற்றினார். இந்திய அளவில் மூன்றாவது பெரிய தேசிய கட்சியாக உருவாக்கினார்.

32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்த பெருமை அம்மா அவர்களை சாரும். அம்மா அவர்கள் தமிழ்நாட்டில் கல்வி புரட்சி,தொழில் புரட்சியை ஏற்படுத்தினார். இடைநிற்றலை தவிர்க்க மாணவர்களுக்கு 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினார்.

விலையில்லா மடிகணினி, பாடப்புத்தகங்கள், காலணிகள், மிதிவண்டிகள், மாணவ-மாணவிகளுக்கு வழங்கி அவர்கள் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றி வைத்தார். எந்த நாட்டிலும் இத்தகைய சலுகைகள் கிடையாது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர். கட்சியும் ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர்.

குடிமராமத்து நாயகன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எளிதாக அனைவரையும் அணுகக் கூடியவர்.ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலில் சேர கூடாது என்பதற்காக நீர் மேலாண்மை இயக்கத்தை உருவாக்கி உள்ளார். நிலத்தடி நீர் உயர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலை சிறந்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி விளங்குகிறார். ராசியான முதல்வர்.

தொழில் துறை, சுகாதாரத்துறை, கல்வித் துறை ,வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அம்மாவின் அரசு முதன்மை அரசாக விளங்குகிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மக்கள் பணியே மகேசன் பணி என கழகம் என்ற பேரியக்கம் செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற சாதனைகள் படைத்து திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறார் . மக்கள் நலன் காக்கும் இயக்கமாக கழக அரசு விளங்குகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக கட்சி காணாமல் போய்விடும்.அன்னிய முதலீட்டார்கள் மூலம் 3 லட்சத்து 520 கோடி முதலீடும் 53 தொழிற்சாலைகளும் உருவாகியுள்ளது. இதனால் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

விரைவில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் ரூ.2ஆயிரம் கோடி முதலீட்டில் தைவான் நாட்டை சேர்ந்த காலணி தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஆர்.தமிழரசன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சரவணன், பேரூராட்சி கழக செயலாளர் மஞ்சுநாதன், கவிதா கலைக்குமார் ஆதிமூலம், வழக்கறிஞர் அருண் ஆதி, ஜெகநாதன், சாரதா, சுந்தரமூர்த்தி நாயுடு, சீனிவாசன் நாயுடு, மணிகண்டன், குமார் நரசிம்மன், அண்டாமணி, தலங்கை குப்பன், ராமஜெயம், அசோகன், பிசி கணேசன், ஜான்சன், ராஜவேல் தேவராஜ் விநாயகம், ஞானவேல் மூர்த்தி, மேனகா மற்றும் திரளான கழக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய கழக அவைத் தலைவர் ஏ.எல்.சாமி நன்றி உரையாற்றினார். சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத், ஒன்றிய கழக செயலாளர் பெல் ச.கார்த்திகேயன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.