மற்றவை

தமிழுக்கு மகுடம் சூட்டியவர் அம்மா – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு…

மதுரை:-

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 18.8.2019 முதல் 24.8.2019 வரை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சி பட்டறை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், கடந்த 2012ம் ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றல், எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளிட்ட கலைகளை வளர்க்கும் வகையில், தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கும் தமிழ் கணினி அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது” வழங்கி, சிறந்த கணினித் தமிழ் மென்பொருள் அறிஞர்கள் பாராட்டப்படுகின்றனர்.

இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டைப் போற்றும் வகையில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்படுகிறது.

இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழிதான் மிகவும் தொன்மை வாய்ந்த மொழி. இந்த இனிய தமிழ் மொழிக்கு இதுவரை யாரும் செய்திராத வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்து உலகின் உயர்ந்த மொழிகள் வரிசையில் தமிழை இடம் பெறச் செய்துள்ளார்.

தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் சங்ககாலம் முதல் இக்காலம் வரை தமிழ் மொழியில் உள்ள புகழ் வாய்ந்த பொன்மொழிகளை இலக்கியம் வாரியாக தொகுத்து வெளியிடும் பொன்மொழிக் களஞ்சியம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தமிழ்ச்சான்றோர்களின் தமிழ்ப் பணியையும், நாட்டுப் பற்றையும் உலகறியச் செய்யும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெருமைகளை நாளைய வரலாறு பேசும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றியவர்களில், மக்களையும், தியாகிகளையும், தமிழ்ச் சான்றோர்களையும் அதிகமாக நேசித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான். வாழ்ந்தவர்களுக்கும், வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி ஓர் பொற்கால ஆட்சி என்றே சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் தந்தை பெரியார் காலம் தொடங்கி தமிழ் உணர்வும், திராவிட உணர்வும் இணைந்தே வளர்ந்து வந்திருக்கின்றன. இந்தியத் தேசியத்திற்குள், தமிழ்த் தேசியம் தன் அடையாளங்களை இழந்து விடாமல் ஊடாடி வந்திருக்கிறது. பல மாநிலங்கள் மௌனமாக இருந்த போதும் மாநில சுயாட்சியை உரத்துப் பேசியது தமிழகம்தான்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா போன்றவர்கள் தமிழகத்தின் தனித்தன்மைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். அதிலும் அம்மா அவர்கள், உலகத் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் கட்டி எழுப்பியதோடு எத்தனையோ தமிழறிஞர்களைப் போற்றிப் புகழ்ந்தவர், தமிழ்நாட்டுக்குள் வசிக்கும் தமிழருக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய தமிழ் இனமே நம்பிக்கை கொள்ளக் கூடிய ஒரே தலைவியாக அம்மா அவர்கள் செயல்பட்டு வந்துள்ளார்கள் என்று பேசினார்.