தற்போதைய செய்திகள்

தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர் – அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரம்

தமிழகத்தை கழகமே ஆளவேண்டும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து அதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று செஞ்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்திற்குட்பட்ட மழவந்தாங்கலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், வல்லம் முன்னாள் ஒன்றிய சேர்மன் அண்ணாதுரை, பாசறை ஒன்றிய செயலாளர் சோழன், பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனா. மாவட்ட மகளிரணி தலைவர் மல்லிகா, ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், ஒன்றிய துணை செயலாளர் தேவகி ராஜாராம், இணை செயலாளர் காமாட்சி கணேசன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தமிழகத்தில் மாபெரும் புரட்சியை செய்துள்ளார். அவரது புரட்சியின் காரணமாக தீயசக்தி கருணாநிதியை ஒழிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். கோடிக்கணக்கான தொண்டர்களை வாழ வைத்ததன் காரணமாக பிறந்தும் இத்தனை ஆண்டுகள் ஆயினும் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகின்றோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியாவை சுரண்டி கொள்ளையடிக்கும் கருணாநிதி கும்பலை விரட்டி அடித்தனர். எனவே தான் எம்.ஜி.ஆர் இருக்கும் வரை கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆகும் கனவு ஒரு போதும் பலிக்காது. அம்மாவின் மறைவிற்கு பிறகு கழக ஆட்சியானது இன்றைக்கு போய்விடும். நாளைக்கு போய்விடும். அடுத்த மாதம் போய்விடும் என்று கபட நாடகம் நடத்தினார். கட்சியானது இரண்டாக பிளவுபட்டு பல்வேறு சோதனைகளை கடந்து இழந்த சின்னத்தை மீண்டும் பெற்று எம்.ஜி.ஆர் கண்ட அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் ஆசியும், அம்மாவின் ஆன்மாவும் உறுதுணையாக இருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா எனக்கு பிறகும் கழக ஆட்சியானது 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் என கூறினார்கள். அதிமுகவானது தொண்டர்களின் ஆதரவால் தான் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பான ஒரு ஆட்சியை செய்து வருகிறார்கள். மேலும் அம்மாவின் அரசானது சிறப்பான நிர்வாகம் செய்து அனைத்து துறைகளிலும் சிறப்பிடம் பெற்றுள்ளோம்.

மேலும் இந்தியாவில் தமிழகமானது முன்னிலை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இந்தியாவை யார் ஆள வேண்டும். தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய் பிரச்சாரம் செய்து 38 தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற போது வேலூர் தொகுதியில் வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வினர் வெற்றிபெற்றார்கள்.

தேர்தலின் போது மத்திய அரசு காஷ்மீர் பிரச்சினையின் காரணமாக அ.தி.மு.க தோல்வியுற்றது. இல்லையென்றால் வேலூர் தொகுதியில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பெற்றிருப்போம். எனவே தான் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.