தற்போதைய செய்திகள்

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 23-வது கிளை திறப்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்பு

மதுரை:-

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 23-வது கிளை கட்டடம் மற்றும் 19 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும், முதலமைச்சர் கூட்டுறவே நாட்டுயர்வு என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மதுரை, தேனி வருவாய் மாவட்டங்களை செயல் எல்லையாக கொண்டு மதுரை மாவட்டத்தில் 34 கிளைகளுடனும், தேனி மாவட்டத்தில் 10 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 903 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களை கொண்டு 108-வது ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மத்திய கூட்டுறவு வங்கியின் 23-வது கிளையானது, வங்கியின் சொந்த கட்டிடத்தில் செயல்படக்கூடியது. கடந்த 2018-19-ம் ஆண்டில் வங்கியின் மொத்த லாபம் ரூ.5.10 கோடி ஆகும். இதில் 4 சதவீத பங்கு சங்கங்களுக்கு ஈவுத்தொகையாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டில் ரூ.9.39 கோடி கூடுதலாக வங்கிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.150.80 கோடியில் இருந்த சொந்த நிதி தற்பொழுது ரூ.169.64 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புத் தொகையாக இருந்த ரூ.1038.34 கோடியிலிருந்து 1107.02 ஆக உயர்ந்துள்ளது. 31.12.2019 அன்று மத்திய வங்கி சட்டப்பூர்வமாக பராமரிக்க வேண்டிய முதலீடுகளுக்காக ரூ.272.99 கோடி அரசு கடன் பத்திரங்களில் கூடுதலாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டில் மத்திய கூட்டுறவு வங்கியானது விவசாயம் மற்றும விவசாயமல்லாத கடனாக ரூ.1275.62 கோடி வழங்கியுள்ளது. இதுவரை ரூ.1365.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை காட்டிலும் ரூ.89.58 கோடி கூடுதலாகும்.

இதுவரை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் பயிர்கடனாக 22,663 உறுப்பினர்களுக்கு ரூ.195.05 கோடியும், தாழ்த்தப்பட்டோருக்கான பயிர்கடனாக 1535 உறுப்பினர்களுக்கு ரூ.10.72 கோடியும், புதிய உறுப்பினர்களுக்கான பயிர்கடனாக 2910 உறுப்பினர்களுக்கு ரூ.22.68 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

முதலீட்டு கடனாக 1410 உறுப்பினர்களுக்கு ரூ.8.89 கோடியும், பொதுவகை கடனாக 247 உறுப்பினர்களுக்கு ரூ.5.85 கோடியும், விவசாய நகை கடனாக 140462 உறுப்பினர்களுக்கு ரூ.403.13 கோடியும், மகளிர் சிறு உதவி குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களின் மூலம் 5888 குழுக்களுக்கு ரூ.22.54 கோடியும், பிற கிளைகளின் மூலம் தற்பொழுது வரை 45930 வாடிக்கையாளர்களுக்கு ரூ.346.74 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. செயலற்ற ஆஸ்திகளுக்கான ஒதுக்கீடாக ரூ.166.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயலற்ற ஆஸ்திகளின் சதவீதம் 16.29 சதவீதத்தில் இருந்து 15.33 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு செயல்பாடுகளால் வங்கியின் நிகர மதிப்பு ரூ.150.80 கோடியிலிருந்து ரூ.169.64 கோடியாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை மண்டல இணை பதிவாளர் ரா.ராஜேஷ், மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவர் செல்லப்பாண்டியன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் அ.ஜீவா, மதுரை நகர கூட்டுறவு வங்கி இணைபதிவாளர் கோ.ச.நந்தகுமார், மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் ஜெ.ராஜா, மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் க.அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.