தற்போதைய செய்திகள்

திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது யார்? பொதுமேடையில் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? திமுகவுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பகிரங்க சவால்

விருதுநகர்

மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது யார் என்று பொதுமேடையில் தி.மு.க. விவாதிக்க தயாரா? என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நகர கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிவநேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருகிறது. சிவகாசி ஒன்றியத்தில் இன்னும் ஒருசில நாட்களில் சீவலப்பேரி குடிநீர் திட்டத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளோம். சிவகாசி ஊராட்சி ஒன்றிய அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். திருத்தங்கல் நகராட்சிக்கு ஏற்கனவே மானூர் குடிநீரை நாங்கள் தான் கொண்டு வந்தோம். தற்போது கூடுதலாக புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

திருத்தங்கல் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார் என்று நினைத்து பார்க்க வேண்டும். தற்போது நகராட்சிக்கு தேர்தல் வர இருக்கிறது. தேர்தல் வந்தவுடன் சிலர் அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று பொய் சொல்லி ஓட்டு கேட்பாா்கள். திமுக ஆட்சிக்காலத்தில் திருத்தங்கல் நகராட்சிக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

குடிநீர் மேல்நிலை தொட்டி, வாறுகால், சாலை வசதிகள், புதிய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உட்பட அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்தது கழக ஆட்சி தான். ஆகவே மக்களிடத்தில் ஓட்டு கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. ஓட்டு போடக்கூடிய கடமையும் உங்களுக்கு உள்ளது. சில நேரங்களில் எங்கள் கரங்களை தட்டிவிட்டுக்கூட நீங்கள் இருந்திருக்கலாம். எங்களை கண்டித்து இருக்கலாம்.

நாங்கள் உங்களுக்காக உழைக்க கூடியவர்கள். நீங்கள் எங்களை விரட்டினாலும் நாங்கள் உங்கள் வீடு தேடிவந்து உங்கள் பிரச்சினைக்காக பாடுபடுவோம். அந்த அளவிற்கு மக்கள் சேவை செய்பவர்கள் அண்ணா திமுக தொண்டர்கள். எம்ஜிஆர், புரட்சித்தலைவி வழி வந்தவர்கள் அண்ணா திமுக தொண்டர்கள். மக்களிடம் பொய் சொல்லி ஓட்டுவாங்க திமுகவினர் நினைக்கின்றனர். நாங்கள் பாட்டு எழுதி பேர் வாங்குகிறோம். திமுகவினர் குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கி விடுகின்றனர். எனவே நாட்டு மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

தேர்தல் வந்தவுடன் திமுகவினர் அதை செய்வோம் இதை செய்வோம் என்று சொல்வார்கள். இதற்கு முன்னால் அவர்கள் இருந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்று சொல்ல சொல்லுங்கள். மக்கள் நலத்திட்டங்கள் யார் ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்று திமுகவோடு பொதுமேடையில் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் உங்களை தேடி வர மட்டோம். எப்பொழுதும் உங்களோடுதான் இருந்து பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வல்லிக்கண்ணன், கழக நிர்வாகிகள் சாந்தி சிவநேசன், அ.செல்வம், சேதுராமன், முருகன் கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கபாளையம் காசிராஜன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ரமணா, கிருஷ்ணமூர்த்தி, நகர அவைத்தலைவர் கோவில்பிள்ளை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் முருகன், காளிராஜன், சசிகுமார் ஆகியோர் நன்றி கூறினர். கூட்ட ஏற்பாடுகளை திருத்தங்கல் நகர கழக செயலாளர் பொன் சக்திவேல் செய்திருந்தார்.