தற்போதைய செய்திகள்

மக்கள் விருப்பத்தை கழக அரசு உடனே நிறைவேற்றி கொடுக்கிறது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

நாகப்பட்டினம்

மக்கள் விருப்பத்தை கழக அரசு உடனே நிறைவேற்றிக் கொடுக்கிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகப்பட்டினத்தில் உள்ள அவுரித்திடலில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தலைமை கழக பேச்சாளர்கள் எம்.ஏ.புரட்சி துரை, ஏ.வி.சி.கோபி, முன்னாள் அமைச்சர்கள் இரா.ஜீவானந்தம், கே.ஏ.ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.வி.பாரதி, வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வா.செல்லையன், மாவட்ட கழக இணைசெயலாளர் என்.மீனா, மாவட்ட கழக துணை செயலாளர் செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் தகுதி அ.தி.மு.கவிற்கு மட்டுமே உண்டு. தி.மு.க.விற்கு அந்த தகுதி கிடையாது. காரணம். தமிழுக்காக தி.மு.க. எதுவும் செய்யவில்லை. இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார். 5-வது உலகத் தமிழ் மாநாட்டை புரட்சித்தலைவர் நடத்தினார். 8வது உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சையில் புரட்சித்தலைவி அம்மா நடத்தினார். ஒரு முறை வட உலகத் தமிழ் மாநாடு நடத்தும் வாய்ப்பு தி.மு.க.விற்கு வரவில்லை. தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கி தமிழுக்கு மேலும் பெருமை சேர்த்தவர் புரட்சித்தலைவர். தந்தை பெரியார் சீர்திருத்த எழுத்துக்களை கொண்டு வந்தார்.

அதையும் சட்டமாக்கவில்லை கருணாநிதி. அதை நடைமுறைப்படுத்தி சட்டமாக்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா தமிழுக்காக டெல்லி நேரு பல்கலைக்கழகத்திற்கு இருக்கை ஏற்படுத்த ஒரே காசோலையாக வழங்கி இருக்கை ஏற்படுத்தினார். முத்தமிழுடன் 4-ம் தமிழாக அறிவியல் தமிழை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர். தமிழுக்காக, தமிழ்மொழிக்காக , தமிழ் கலாச்சாரத்திற்காக உழைத்தவர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே தான் வீரவணக்க நாள் கூட்டம் நடத்துவதற்கு தகுதி உள்ள கட்சி அ.தி.மு.க.

தற்போது தமிழ் மக்களின் மனதில் குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்கள் எண்ணத்தில் குடியுரிமை சட்டம் என்ற பெயரில் தி.மு.க. விஷப் பிரச்சாரம் செய்து கொண்டு அதை பயன்படுத்தி ஓட்டு வாங்க முயற்சி செய்கிறது. குடியுரிமை சட்டம் எந்தவிதத்திலும் இஸ்லாமிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. புதிய குடியுரிமை சட்டம் வங்காளதேசம், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், மியான்மர் போன்ற 4 நாடுகளில் மட்டும் தான்.

இதை புரியாமல் சகோதர்களாக வாழும் முஸ்லிம்களின் மனதில் விஷமம் செய்கிறது தி.மு.க. அசாம் மாநிலத்தில் அங்குள்ள உல்பா தீவிரவாதிகளை அடக்குவதற்கு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. மதக் கொடுமைகள், இஷ்ட தெய்வத்தை வணங்க முடியாத நிலை. இது போன்றவற்றை தடுக்க இந்த சட்டம் வந்துள்ளது. தமிழக மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எந்த விதத்திலாவது பாதிப்பு வரும் என்றால் அ.தி.மு.க வேடிக்கை பார்க்காது. தடுக்க படை எடுக்கும் கட்சி அ.தி.மு.க வாக தான் இருக்கும்.

தமிழ்நாட்டில் மக்கள் விரும்புவதை உடனே இந்த அரசு செய்து வருகிறது. விரைவில் கூரை வீடுகளே இல்லாத நிலை வர வேண்டும் கான்கிரீட் வீடுகளாக மாற வேண்டும் என்பதை குறிக்கோளாக ஏற்றுள்ளார் தமிழக முதல்வர். சமீபத்தில் கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக வேலைகள் நடைபெறுகிறது. பட்டா வழங்குவதிலும் கோவில் இடங்களில் நீண்டகாலம் குடி இருப்பவர்களுக்கும் முறைப்படி பட்டா வழங்கவும் தமிழக அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நெல் விளைச்சல் அமோகமாக உள்ளது. விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். எங்கு பார்த்தாலும் தண்ணீர் போதிய அளவிற்கு உள்ளது. இது அ.தி.மு.க அரசின் சாதனையாகும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.