தற்போதைய செய்திகள்

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம்.ஜி.ஆரின் புகழை அழிக்க முடியாது: அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் பேச்சு

கடலூர்

பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது என அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் கூறினார்.

கடலூர் மத்திய மாவட்டம், கடலூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா, பொதுக் கூட்டம் கடலூர் பாதிரிக்குப்பத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

“தாய்க்கு தலைமகன்” என்றொரு படம் புரட்சித் தலைவர் நடித்தது. உண்மையில் அன்னை சத்யா அம்மாவுக்கு அவர் இளைய மகன் தான். எனவே சின்னவர் என்ற அடைமொழி பெயர் தான் திரைப்படத் துறையில் அனைவராலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை அழைக்கும் பிரபலமான செல்லப் பெயர்.எம்.ஜி.ஆர். இளம் வயதில் கடுமையான வறுமையில் வாடினார். திரைப்படத்துறையால் அவருக்கு வறுமை நீங்கியது.

குடும்பப் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வந்தது. அது போன்ற சூழலில் தமிழகம் உட்பட உலகிலுள்ள எத்தனையோ நடிகர், நடிகைகள் திரைப்படத்துறையில் தனது குடும்ப உறுப்பினர்களோடு சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சகல வசதியுடன் வாழ்வதையே குறிக்கோளாக கொண்டிருந்தார்கள். ஆனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படத் துறையில் தான் உழைத்து சம்பாதித்த, சொத்து அனைத்தையும் நாட்டிற்கும், ஏழை, எளிய மக்களுக்கும் வாரி, வாரி வழங்கினார். எனவே தான் அவரை பாரத் ரத்னா என்று பட்டம் சூட்டி மக்கள், அவரை தெய்வமாக ஏற்றிக், போற்றி வணங்குகிறார்கள்.

புரட்சித் தலைவர் உண்ணாமல் இருந்திருக்கிறார். உறங்காமல் இருந்திருக்கிறார். ஆனால், ஒரு நாளும் தருமம் செய்யாமல் இருந்ததில்லை. தாயை வணங்காத பொழுதில்லை. ‘வாடிய பயிரை கண்டபோதெலாம் வாடினேன்’ என வள்ளலார் மனம் வருந்தினார். வாடிய பயிரைக் கண்டுவிட்டால் அதற்கு ‘நீர் வேண்டுமா? சத்தான உரம் வேண்டுமா?’ என்று செயலில் இறங்கி, வேண்டியதைச் செய்து வளப்படுத்திக் காட்டினார் எம்.ஜி.ஆர். பிறரைக் கெடுக்காமல் வாழமுடியாது என்னும் சிலர் மத்தியில் ‘பிறருக்குக் கொடுக்காமல் வாழ முடியாது’ என வாழ்ந்து காட்டிய வள்ளல் அவர்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அரசியல்வாதி இருக்கிறான். ஆனால் அரசியல்வாதிகளுக்குள் மனிதனைக் கண்டறிவது பனிமனிதனை தேடுவதுபோல் அதிசயமாக உள்ளது. நாடக, திரையுலக மற்றும் பொதுவாழ்க்கைப் பணிகளிலே இடைப்பட்ட பலதடைக் கற்களைப் படிக்கற்களாக அமைத்து அதிலே வீறுநடைபோட்டு வெற்றிகண்டு, சுமார் 10 கோடி உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இன்றும் நாயகனாக கொலுவீற்றிருக்கும் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்றென்றும் வரலாற்று நாயகனாகத் திகழ்வார் என்பது திண்ணம்.

பொன்மனச் செம்மலின் வாழ்க்கை வெற்றிச் சின்னம்தான் அவர் வீற்றிருந்த முதலமைச்சர் பதவி. அதே வெற்றி தொடர்ந்து புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கைகளில் தவழ்ந்தது. என்றால், அது புரட்சித் தலைவர் அவர்கள் போட்டுத் தந்த அரசியல் வெற்றிப்பாதையின் அடிப்படையாகும்.

இச்சிறப்பு வாய்ந்த பாதையில் தமது திறமை, ஆற்றல், துணிவு, திடமான சிந்தனை, தீர்க்கமான முடிவுகள், முன்னோடியான செயல்பாடுகள் வாயிலாகத் தங்கத் தாரகை அவர்கள் ஆசானை மிஞ்சிய மாணவியாக மாபெரும் சாதனைகளின் வரலாற்று நாயகியாக வலம் வந்தார் என்பதும் நாடே போற்றும் நல்லதோர் உண்மையாகும். ஏழை, எளிய மக்கள் அனைத்து நலன்களையும் பெற்றனர். குடிசைக்கு ஒரு இலவச விளக்கு, படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு, விவசாயம் மற்றும் அனைத்து துறைகளிலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம், சாதி, மத நல்லிணக்கம், நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதி போன்ற நாட்டு நலப் பணிகள் அனைத்திலும் ஒப்புயர் பெற்ற உயர்வு.

அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவரது அரசியல் வாரிசு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தனது ஆசானின் சாதனைகளை கட்சியிலும், ஆட்சியிலும் மேலும் நிலைபெறச் செய்தது மட்டுமல்ல், பல லட்சமாக இருந்த கழக உறுப்பினர்களை ஒன்றரை கோடியாக உயர்த்தியும், பிறக்கபோகும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பயன் பெற புதிய, புதிய பலப் பல திட்டங்களை நிறைவேற்றி, ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்பதை நிரூபித்து, ஆறுமுறை முதலமைச்சராகப் பதவி ஏற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே, புகழ் சேர்த்தவர் புரட்சித்தலைவி அம்மா.

இரு தலைவர்களின் வழியில் பெண்கள், குழந்தைகள் நலம் காக்கும் திட்டத்தில் தமிழகம் முதலிடம், பால் உற்பத்தி, கால்நடை பாதுகாப்பில் தமிழகம் முதலிடம், கல்வியில் அனைத்திந்தியாவிலேயே சிறப்பிடம் என்ற சரித்திரப் பெருமைகளை இன்றைக்கு உருவாக்கிய சாதனைக்கு சொந்தக்காரர்களாக முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகிய தலைவர்கள் புகழ் பெற்று விளங்குகிறார்கள்.

அத்தகைய பெரும்சிறப்புக்கு அடித்தளமிட்டு வழி அமைத்து தந்த வரலாற்று நாயகராக, நாயகியாக விளங்கியவர்கள் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் ஆவர். இந்த இயக்கத்தை நாட்டிற்கு அர்பணித்த மக்கள் திலகத்தின் 103-வது பிறந்த நாள் இன்று. யார் யாரோ புரட்சித் தலைவரின் புகழை மறைக்க முயலுகிறார்கள்.

அம்மாவின் அரசை செம்மையாக செயல்படுத்தி, அற்புதமான திட்டங்கள் மூலமாக மக்களை காத்து வருகின்ற கொங்குநாட்டு தங்கம், தமிழக முதல்வர் எடப்பாடியாரையும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஐயும் வசைபாடி வருகிறார்கள். பாரத ரத்னா, டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழை எத்தளை ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது. எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் மக்கள் அரசை எவராலும் அசைக்க கூட முடியாது.

இவ்வாறு தமிழ்மகன் உசேன் பேசினார்.