சிறப்பு செய்திகள்

மகளிர் மேம்பாட்டு திட்ட பணிகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு திட்டங்களை தொய்வின்றி நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை

மகளிர் மேம்பாட்டு திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டங்களை தொய்வின்றி நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள், முன்னேற்றம் குறித்த பணி ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பின் மூலம் ரூ.12,500 கோடி வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கு குறித்தும், தேசிய ஊரக பொருளாதார புத்தாக்கத் திட்டத்தை நடப்பாண்டு முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.210.27 கோடி மதிப்பீட்டில், கடலூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 5 மாவட்டங்களில் தலா 4 வட்டாரங்களில் செயல்படுத்துவது குறித்தும், ரூ.125 கோடி செலவில் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள் வழங்குவது குறித்தும், தமிழ்நாடு கிராம வங்கியும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனமும் ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கு சேலத்தில் 2 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், அமைச்சர் 2019-20 மானியக் கோரிக்கையின் போது அறிவித்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 7,000 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10.5 கோடி மதிப்பில் குழு ஒன்றுக்கு ரூ.15,000 வீதம் ஆதார நிதியாக தற்போது வரை வழங்கப்பட்டுள்ள நிதி குறித்தும், 17,900 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.89.5 கோடி மதிப்பில் குழு ஒன்றுக்கு ரூ50,000 முதல் ரூ.75,000 வரை வழங்கப்பட்டுள்ள சமுதாய முதலீட்டு நிதி குறித்தும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வறுமையைக் குறைத்திட ஏதுவாக ரூ.31.26 கோடி மதிப்பில் கூடுதலாக 65 வட்டாரங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்தி செயல்படுத்துவது குறித்தும்,

மகளிர் விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக ரூ.15 கோடி மதிப்பில் 1,000 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 60 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கும் திட்டத்தின் நிலைப்பாடு குறித்தும், ரூ.2 கோடி மதிப்பில் இரண்டு லட்சம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்திட அமைக்கப்படும் “ஊட்டச்சத்து தோட்டம்” பணிகள் குறித்தும்,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் முன்மாதிரி நகர வாழ்வாதார மையங்கள் அமைக்கும் திட்டப்பணிகள் குறித்தும், ரூ.20 கோடி மதிப்பில் 1,000 தெருவோர வியாபாரிகளுக்கான ஒத்த தொழிலார்வக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் குழு கடனுதவி பெறவும், ரூ.25 கோடி மதிப்பில் 5,000 நகர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் தனிநபர் கடன் வழங்கும் திட்டம் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

மேலும், முதலமைச்சர் அறிவித்துள்ள ஊரக மகளிருக்கான பயனுள்ள திட்டங்களை எவ்வித தொய்வும் இன்றி விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தவிட்டார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குநர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்ட தலைமை செயல் அலுவலர் ச.ப.கார்த்திகா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகியவற்றின் கூடுதல் இயக்குநர்கள் பா.செல்வராஜன், ஜா.சம்பத், ஜே.கணேஷ் கண்ணா, ஜி.சரஸ்வதி கணேசன், சி.கே.வீரணன், இணை இயக்குநர்கள், பொது மேலாளர் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.