சிறப்பு செய்திகள்

9 மருத்துவ கல்லூரிகளுக்கு விரைவில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அணு அளவும் இல்லை. அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் ஆணைப்படி எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதேபோல் திருச்சி, கோவை போன்ற சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என்பது குறித்து ஸ்கிரினிங் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக மக்கள் பீதியோ, பயமோ, அச்சமோ படத் தேவையில்லை. அனைத்து முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இது குறித்து விபரங்களை கண்டறிய மத்திய அரசு அனுப்பியுள்ள 3 பேர் கொண்ட குழு சென்னை வந்துள்ளது. அவர்கள் சென்னை மற்றும் முக்கைிய நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவார்கள்.

இந்தியாவிலேயே 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரே ஆண்டில் அனுமதி வாங்கிய அரசு புரட்சித்தலைவி அம்மா தலைமையின் கீழ் உள்ள அரசு தான். இந்த 9 மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்ததோடு உரிய நிதியையும் ஒதுக்கி இருக்கிறது. தமிழக அரசும் அதற்குரிய நிதியை ஒதுக்கி நில ஆர்ஜித பணிகளையும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 9 மருத்துவக் கல்லூரிகளுக்கும் அடிக்கல் நாட்ட இருக்கிறார். வெகு விரைவில் இந்த 9 மருத்துவக் கல்லூரிகளும் செயல்படத் தொடங்கும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.