இந்தியா மற்றவை

மும்பையில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டம் அமலுக்கு வந்தது

மும்பை:-

24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் இரவு வாழ்க்கை திட்டம் மும்பையில் அமலுக்கு வந்தது. எனினும் முதல் நாளில் இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் ஆதித்ய தாக்கரே கடந்த பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியின் போதே மும்பையில் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். எனினும் அப்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில் தனது தந்தை உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி அமைந்த நிலையில், மும்பையில் 24மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைக்கும் இரவு வாழ்க்கை திட்டத்தை செயல்படுத்த ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டினார். இந்த திட்டத்துக்கு சமீபத்தில் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து குடியரசு தினமான நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எனினும் முதல் நாளில் இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. நரிமன்பாயிண்ட்,ஒர்லி உள்ளிட்ட பகுதிகளில் பல வணிக வளாகங்கள் பூட்டியே கிடந்தன. திறந்து வைக்கப்பட்டு இருந்த இடங்களிலும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. நாள் ஆக, ஆக இதற்கு வரவேற்பு கிடைக்கும் என கடைக்காரர்கள் கூறினர்.

இது குறித்து அமைச்சர் ஆதித்ய தாக்கரே கூறுகையில், நள்ளிரவில் கூட வெளியே செல்வது பாதுகாப்பானது மற்றும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க முடியும் என மக்கள் உணரும் போது, இரவு வாழ்கை திட்டத்தின் வேகம் அதிகரிக்கும். வரும் வாரங்களில் இது நடக்கும். முதல் நாளே அதிக மக்கள் வெளியே வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றும் நிறுவனங்கள் மட்டுமே இரவு திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.