தற்போதைய செய்திகள்

ஏழை, எளிய மக்கள் விண்ணப்பித்தால் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி…

விருதுநகர்:-

ஏழை, எளிய மக்கள் விண்ணப்பித்தால் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 677 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 35 லட்சத்து 8 ஆயிரத்து 855 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கி பேசியதாவது:-

அரசை தேடி மக்கள் சென்ற நிலையை மாற்றி, மக்களைத் தேடி அரசு நலத்திட்ட உதவிகள் என்ற நிலையில் எடப்பாடி கே.பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், நீர் மற்றும் கண்மாய் புறம்போக்கு தவிர மற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக வசித்தும், பட்டா இல்லாத ஏழை எளிய மக்கள் பட்டா வேண்டி விண்ணப்பித்தால் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நீர் மற்றும் கண்மாய் புறம் போக்கில் வீடு கட்டியவர்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தில் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பட்டா இல்லாத ஏழை எளிய மக்கள் பட்டா வேண்டி விண்ணப்பித்தால், பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்கள், நகராட்சிகள் என அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவையான இடங்களில் சாலை வசதிகள் மேற்கொள்ள விண்ணப்பம் கொடுக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும். எனவே விருதுநகர் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்வதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.