தற்போதைய செய்திகள்

புதுமையான மாநகரமாக மதுரை விரைவில் மாறும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…

மதுரை:-

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் மதுரை விரைவில் புதுமையான மாநகரமாக மாறும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி முத்துப்பட்டியில் ரூ.27.80 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பிக்கும் பணி ஆணையாளர் ச.விசாகன், தலைமையில் நடைறெ்றது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெரியார் பேருந்து நிலைய பணிகள், மீனாட்சியம்மன் கோயில் அருகில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிட பணிகள், வைகை ஆற்றின் இருகரைகளையும் பலப்படுத்தி கழிவுநீர் கலக்காத வகையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டும் வருகிறது.

மதுரை மக்களுக்கு வரப்பிரசாதமான ரூ.1057 கோடி மதிப்பீட்டில் அம்ரூட் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாரிலிருந்து 120 எம்.எல்.டி குடிநீர் குழாய்கள் மூலம் நேரடியாக கொண்டுவந்து மதுரை மக்களுக்கு தங்குதடையின்றி வழங்க வழிவகை செய்யும் திட்டம் மூன்று திட்டங்களாக 87 உயர்மட்ட தொட்டிகள் மூலம் 100 வார்டு பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மதுரை மக்களுக்கு குடிநீர் பிரச்சனையே இருக்காது.

மதுரை மாநகரை மாசில்லா மாநகராக உருவாக்கின்ற பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 100 வார்டுகளில் 30 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு பேட்டரி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக குப்பைகளை பிரித்து வாங்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பிரச்சார வண்டி ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இப்பணி முழுமையாக மேற்கொள்ளப்பட்டு மதுரை மாநகர் தொன்மையாக மாநகர் மட்டுமல்ல புதுமையான மாநகராகவும் மாற உள்ளது. சென்ற வருடம் முத்துப்பட்டி கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது. தற்போது கருவேலமரங்கள் வளர்ந்துள்ளது முத்துப்பட்டி கண்மாய், கீழமாத்தூர், மேலமாத்தூர், கொடிமங்கலம் ஆகிய கண்மாய்கள் குடிமராமத்து பணிகள் மூலம் தூhர்வார கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது விரைவில் இக்கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது இதன் மூலம் மழைநீரை சேமித்து வைக்க முடியும்.

மதுரை மாநகராட்சி பந்தல்குடி வாய்க்காலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் கலக்காத வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் ரூ.67 கோடி மதிப்பீட்டில் வைகை ஆற்றில் இருகரைகளிலும் பூங்கா மற்றும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைத்து வெளிநாடுகளுக்கு இணையாக வைகை ஆறு சீரமைக்கப்பட உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி அதிவிரைவில் கண்டிப்பாக துவங்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

முதலமைச்சர் வரவு செலவு அறிக்கையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையில் இரண்டு துணை காவல் நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். பழிக்கு பழி வாங்கும் நிகழ்வுகள் நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என நாம் கருத முடியாது. காலப்போக்கில் இது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

அதனைத் தொடர்ந்து ஆண்டாள்புரம் முதல் ரமணஸ்ரீகார்டன் வரையுள்ள 1500 மீட்டர் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கு செல்லும் அவனியாபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவிப் பொறியாளர்கள் முத்துராமலிங்கம், சங்கிலி, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் சுப்புராஜ், சந்திரசேகர், ஜான்பீட்டர் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.