தற்போதைய செய்திகள்

சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புகழாரம்

திருப்பூர்

சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர கழகம் சார்பில் தங்கம்மாள் ஓடை அருகில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கால்நடைத் பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் கா.லியாகத் அலிகான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

ஏழை எளியோர் வீட்டுப்பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலே சத்துணவு திட்டத்தை கொடுத்து வந்த ஒரே முதலமைச்சர் நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக்க புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக பொறுபேற்ற பிறகு மதிய உணவில் சத்தான உணவு என்னென்ன கொடுக்க வேண்டுமென்பதை தாய்மார்களுக்கெல்லாம் தாயாக இருந்து அனைத்து வகையான உணவுகளையும் சத்துணவில் கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

புரட்சித்தலைவி அம்மா மறைவிற்கு பிறகு இன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சீரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். இன்றைக்கு புக்குலத்திலே 30 கோடி ரூபாய் செலவில் இன்னும் ஒரு மாத காலத்தில் வீடுகள் கட்டும் பணி நிறைவு பெற இருக்கின்றது. அதன்பிறகு இந்த பகுதியில் வசித்த ஏழை எளியோர்களுக்கு வீடு வழங்கப்படும்.

ஏழை, எளியோர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் ஏதாவது ஒரு வகையிலே உன்னுடைய பணி இருக்க வேண்டும் என்று அம்மா அவர்கள் சொன்னார்கள். அதை மனதிலே வைத்து கொண்டு தான் வீட்டு வசதித்துறை அமைச்சராக பொறுபேற்று 2,10,000 ரூபாய் முழு மானியத்தில் பசுமை வீடுகள் கட்ட வேண்டும் என்று ஒரு திட்டத்தை நான் அன்று கொண்டு வந்தேன். அம்மா அவர்கள் சொன்னதை நாம் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் நமக்கு. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர வருங்காலங்களிலும் கழக ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து ஆதரவை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இக்கூட்டத்தில் நகர பாசறை செயலாளர் ருத்ரேஸ்வரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி.வி.வாசுதேவன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ஏ.ஹக்கீம், வார்டு செயலாளர் நந்தகோபால், தா.பாலு, நாகராஜ், ஆட்டோ பாண்டியன், சின்னக்குமார், ராஜேந்திரன், அப்பாத்துரை, நாச்சிமுத்து, சாந்தி, கணேஷ், பாண்டி, எஸ்.எம்.நாகராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆறுமுகம், பெரியகோட்டை முருகேஷ், மாரிமுத்து, மினிட்டர் சுப்பிரமணியம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.