தற்போதைய செய்திகள்

முதல்வரின் குடிமராமத்து திட்டம் வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…

மதுரை:-

புரட்சித்தலைவரின் சத்துணவுதிட்டம், அம்மாவின் மழைநீர்சேகரிப்பு திட்டத்தைப்போல் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் வரலாற்றில் இடம் பெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதிபட தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் குடி மராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள வில்லூர் கண்மாயில் குடிமராமத்து திட்டத்தில் தூர் வாரும் பணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் மற்றும் நிர்வாகிகள் ஜெயராமன், திருப்பதி, அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, நெடுமாறன், பாலசுப்பிரமணி, தமிழழகன், ஆண்டிச்சாமி, பா.வெற்றிவேல், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடிமராமத்து பணியை தொடங்கிவைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

உலகளவில் நீர் ஆதாரங்கள் குறைந்து வருகின்றன. அதனால் தான் புரட்சித்தலைவி அம்மா தொலைநோக்கு சிந்தனையுடன் மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சரும் நீர் ஆதாரத்தை பெருக்கும் வண்ணம் கரிகால்சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட குடிமராமத்து திட்டபணியை உருவாக்கினார். அதன்படி கடந்த 2016-2017-ம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 1519 ஏரி, கண்மாய்கள் தூர்வாரப்பட்டன. அதனை தொடர்ந்து 2018-2019-ம் ஆண்டில் ரூ.328 கோடி மதிப்பில் 1511 ஏரி, கண்மாய்கள் தூர்வாரப்பட்டது.

தற்போது இந்த ஆண்டிற்கும் ரூ.500 கோடி ஒதுக்கி 1819 ஏரி, கண்மாய்கள் தூர்வாரப்பட உள்ளன. அதனை தொடர்ந்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் நிலத்தடி நீரை அதிகப்படுத்தவும் வேளாண்மை அதனை சார்ந்த துறைகளுக்கு நீர் பயன்பாட்டை அதிகரிக்கவும், மானாவாரி வேளாண்மைக்காக மழைநீரை சேகரிக்கவும், கழிவு நீரை மறு சுழற்சி செய்து உபயோகப்படுத்தவும் குறிப்பாக ஆறுகள், ஏரிகள், உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரை சேகரிக்கவும் இதனை போன்று பல்வேறு அம்சங்கள் கொண்டு அனைத்து குக்கிராமங்களிலும் நீர் பாதுகாப்பு வாரியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நீர்வள பாதுகாப்பு மக்கள் இயக்கத்தை அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் நடைபெறும் குடிமராமத்து திட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கிராமங்கள் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் போன்ற பல்வேறு நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த நீர்நிலை பாதுகாப்பு மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. எப்படி புரட்சித்தலைவரின் சத்துணவுத்திட்டம் வரலாற்று சிறப்பு பெற்றதோ அதேபோல் புரட்சித்தலைவி அம்மா மழைநீர் சேகரிப்பு திட்டம் வரலாற்று சிறப்பு பெற்றதைப்போல் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் தற்போது வரலாற்று சிறப்பு பெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதாரபாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் 318 சிறு பாசன கண்மாய்கள்,, 1576 ஊரணிகள் மற்றும் குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி நடைபெறுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் ரூ.31 கோடி. முதலமைச்சர் மழை காலங்களில் வரும் மழைநீரில் ஒரு சொட்டுக்கூட கடலில் வீணாக கலக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று தொடர்ந்து திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். நீர் இன்றி அமையாது உலகு என்பதைப்போல் நீர் ஆதாரத்தை பெருக்கும் வண்ணம் உலகில் யாரும் சிந்தித்திடாத திட்டங்களையெல்லாம் செயல்படுத்தி வருகிறார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் குடி மராமத்து திட்டத்திற்கு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக கூறுகின்றனர். நாங்கள் மக்கள் அறிக்கையை வைத்து திட்டங்களை வழங்கி வருகிறோம். கடந்த 5 முறை திமுக ஆட்சியில் இருந்த போது இது போன்ற திட்டபணிகளை செய்தது உண்டா? அம்மாவின் வழியில் தொலைநோக்கு திட்டத்துடன் நீர் பாதுகாப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம் ஆனால் மத்தியில் திமுக அங்கம் வகித்த போது சேது சமுத்திர திட்டத்தில் ஊழல் செய்தவர்கள் தான் திமுக வினர். நாங்கள் நீரை பாதுகாக்கிறோம். ஆனால் திமுகவோ நீரில் ஊழல் செய்தது. இதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நமக்கு நாமே திட்டத்தின் போது ஸ்டாலின் கரும்பு தோட்டத்தில் காலணி அணிந்து சிமெண்ட் ரோடு அமைத்து அதன் மேல் நடந்து விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்பது போல் நாடகமாடினார். ஆனால் இன்றைக்கு அம்மாவின் தொண்டனாக இருக்கும் ஒரு சாதாரண விவசாயியாக இருக்கும் முதலமைச்சர் குடி மராமத்து திட்டத்தில் காலணியே அணியாமல் மண்வெட்டி எடுத்து மண்ணைவெட்டி அந்த திட்டப்பணியை தொடங்கி வைத்தார்.

அது மட்டுமல்லாது முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை தொடங்கி வைத்து 18860 மனுக்களை நேரடியாக பெற்றார். இதன் மூலம் யார் மக்கள் மீது பற்றுதல் வைத்துள்ளனர் என்பது நாட்டுமக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே மக்களாகிய நீங்கள் உங்களுக்கு என்றைக்கும் ஆதரவாக இருக்கும் எங்களுக்கு எப்போதும் நல் ஆதரவை தந்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.