சிறப்பு செய்திகள்

அருண் ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி இரங்கல்…

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தலைசிறந்த ஒரு தலைவரை இந்தியா இழந்து விட்டது என்று தனது இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது நிதி அமைச்சராக இருந்தவர் அருண்ஜெட்லி. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இவர் உடல் நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதனால் கடந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. கடந்த 9-ந்தேதி மீண்டும் அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை தேறி வந்தபோதும் மீண்டும் மோசமானது. நேற்று நண்பகல் 12 மணி அளவில் அருண்ெஜட்லி மரணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த அருண்ஜெட்லியின் உடல் நேற்று அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை அருண் ஜெட்லியின் உடல் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளரது. 2 மணிக்கு பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்படும். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:- 

மத்திய நிதித் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், அரசியல் உலகில் பிரபலமான தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 24.8.2019 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் அதிர்ச்சியும், மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.

அருண் ஜெட்லி, தன்னுடைய மாணவ பருவத்தில் கல்வித் திறன் மற்றும் பிற கல்வி சாரா செயல்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவ சங்கத் தலைவராகவும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்துள்ளார்.

இந்தியத் திருநாட்டின் நிதித் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், மக்களின் நன்மை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியவர். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர்.

அருண் ஜெட்லி அவர்களின் மறைவு, அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சித் தொண்டர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.