சிறப்பு செய்திகள்

ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை:-

தமிழகத்தில் உள்ள நான்கு சக்கர, இரண்டு சக்கர மற்றும் ஆட்டோக்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் ஆட்டோ மொபைல் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் பெரும் பாதிப்படைந்து இருப்பதால் அந்த நிறுவனங்களுக்கு உரிய உதவிகளை செய்யுமாறு பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஆட்டோ மொபைல் தொழில் நிறுவனங்களில் 27 சதவீத தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. கார்களின் விற்பனை குறைந்து வருவதாலும், மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாலும் இந்நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர்கள் வேலையை இழக்க வேண்டிய நிலைமை உள்ளது. எனவே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமும் இத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து இத்தொழிலை காப்பாற்ற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் டி.எஸ்.5 என்ஜினுக்கு பதிலாக டி.எஸ்.6 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்களையே விரைவில்இயக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வங்கிகளிலும் கடன் வழங்கும் திறன் குறைந்து வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட 25 பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 600 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் மெட்ேரா ரயில்களில் தினமும் 2 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு போக்குவரத்து வசதி உள்ளது. இதனால் கார்களில் சென்றவர்களும் கூட மெட்ரோல் ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கார்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கார் விற்பனை சரிவால் கார் உற்பத்தி தொழிலை நம்பியுள்ள ஆட்டோ மொபைல் தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. வரி, செஸ் வரியை குறைப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மீண்டும் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தி முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார். மத்திய அரசின் கவனத்திற்கு முதலமைச்சர் இப்பிரச்சினை குறித்து கொண்டு சென்றுள்ளார். பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.