தற்போதைய செய்திகள்

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி தொடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு…

நாமக்கல்:-

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. விழாவில் அமைச்சர்கள் பி.தங்கமணி, சி.வி.சண்முகம், வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் டான்சி நிறுவன வளாகத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டம், நீதிமன்றம், சிறைச்சாலை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் புதிய சட்டக் கல்லூரியை தொடங்கி வைத்து 12 மாணவ,மாணவிகளுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோதே நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதிக்கு பொறியியல் கல்லூரி அமைக்க உத்தரவிட்டதுடன் அதற்காக ரூ.55 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார். பொறியியல் கல்லூரிக்கான இடம் தேர்வு செய்யப்படுவது தாமதமாகி வருவதால் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் பொறியியல் கல்லூரி தொடங்கப்படும். மருத்துவக்கல்லூரி மட்டும்தான் நாமக்கல் மாவட்டத்தில் இல்லாமல் உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் மருத்துவக்கல்லூரி அமைக்க முதலமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

தமிழகத்தில் 2011 வரை மொத்தம் 7 அரசு சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வந்தது., கடந்த 2017 ல் மட்டும் ராமநாதபுரம், தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 3 சட்டக்கல்லூரிகளை முதலமைச்சர் வழங்கியதுடன், கல்லூரி கட்டடம் கட்ட ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ரூ.70 கோடியும், உள்கட்டமைப்பு பணிகளுக்காக தலா ரூ.10 கோடியும் வழங்கினார். மேலும் இந்த ஆண்டு சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் புதிய சட்டக்கல்லூரிகளை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு கல்லூரிகள் துவக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் சட்டக்கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் சட்டக்கல்லூரி புதிய கட்டடத்தில் செயல்பட, நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சட்டக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் சிறந்த வழக்கறிஞர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக சட்டக்கல்லூரிகளில் மாதிரி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் நீதித்துறை போட்டிகளில் கலந்து கொள்வதற்காக செல்லும் ஒரு மாணவருக்கு ரூ.75,000 வழங்கப்பட்டு வந்த நிதியானது, தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாணவர்கள் இது போன்று வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் வழக்காடி வெற்றிபெற்று பதக்கங்களை பெற்று வந்து அரசிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். நாமக்கல் சட்டக்கல்லூரியில் பயில வந்துள்ள மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞர்களாக உருவாக வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், நாமக்கல் சார் ஆட்சியர் கிராந்தி குமார்பதி, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி தனி அலுவலர் முனைவர் ம.இராஜேஸ்வரன், நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.கே.வேலு, அரசு வழக்கறிஞர்கள் தனசேகரன், சந்திரசேகரன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.