தற்போதைய செய்திகள்

எலக்ட்ரிக் காருக்கு ஜி.எஸ்.டி வரியை குறைக்க ஆலோசனை – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி…

சென்னை:-

எலக்ட்ரிக் காரை ஊக்குவிக்க ஜிஎஸ்டி வரி குறைப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்குபேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுச்சுழல் மாசுபடுவதால் காற்று மாசுபடுகிறது. இதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து நீர் உள்ளே வரக்கூடிய அபாயம் உள்ளது. அதுபோல பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் நிகழக்கூடிய வாய்ப்புகள் உள்ள காரணத்தால் அம்மாவின் அரசு எலக்ட்ரிக் எனப்படும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய நவீன வாகனம் தயாரிக்க 7 ஆயிரம் கோடி அளவுக்கு முதல்வர் அனுமதி அளித்து மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனம் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். மத்திய, மாநில அரசுகள் இதனை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இதற்கான வரியைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்கள். அதாவது எலக்டரிக் வாகனங்களுக்கான வரியை 12சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஆக குறைக்க வேண்டும். பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜர்களுக்கான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஆக குறைக்க மத்திய அரசுக்கு நிச்சயம் அழுத்தம் தர நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது.

இன்று (26ம்தேதி) நடைபெறுவதாக இருந்த 36வது ஜி.எஸ்.டி. கூட்டம் மத்திய நிதி அமைச்சர் கலந்து கொள்ள இயலாததால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று வரி குறைக்கப்படும் போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற முதல் படிக்கல்லை நாங்கள் இதன் மூலம் எடுத்து வைத்துள்ளோம்.

நம்மைப் பொறுத்தவரை 69 பொருட்களுக்கு வரிகுறைக்கச் செய்துள்ளோம். மேலும் 8 சேவைகளுக்கு வரி குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அழுத்தம் அளித்த காரணத்தினால் வரி குறைப்பும், வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தால் முன்மொழியப்பட்டு நீண்டநாட்களாக நிலுவையில் உள்ள பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்க அழுத்தம் தரப்படும்.

தமிழகத்தில் நுண்ணுயிர் பாசன கருவிகளுக்கும், சிறப்புப் பொது விநியோகதிட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வரிவிலக்கு அளிக்கவும், கோவையில் தயாரிக்கப்படும் இயந்திரங்களுக்கு 18சதவீதம் ஆக இருந்த வரியை 12 சதவீதமாக குறைத்ததை மேலும் குறைத்து 5 சதவீதமாக ஆக நிர்ணயிக்கவும், தோல் செருப்புகள் மீதான வரி குறைப்பது, அதனோடு சேர்த்து பல்வேறு பொருட்களுக்கு வரிவிலக்கு மற்றும் வரி குறைக்க நீண்ட நாட்களாகப் பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அடுத்த கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.

மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைப் பொறுத்தவரை, 2017-18ஆம் ஆண்டுக்கான 386 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 2018-19 ஆண்டுக்கான 552 கோடி ரூபாய் நிச்சயம் வரும். ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்தில் விற்பனை ஆகக்கூடிய பொருட்களுக்கான வரி ( ஐ.ஜி.எஸ்.டி.) 4500 கோடி வர வேண்டியுள்ளது. கடந்த தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக வெற்றிபெற்று விட்டதை மக்கள் உணர்ந்து விட்டனர். இந்த தேர்தலில் அரசின் சாதனைகள் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கப்படுகிறது. அதை நினைத்துப் பார்த்து மக்கள் நிச்சயம் நல்ல முடிவை அளிப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.