தமிழகம்

நவீன பாசன வேளாண் திட்டத்துக்கு ரூ.1.47 கோடியில் புதிய வாகனங்கள் – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 1 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 18 வாகனங்களை நீர்வள ஆதாரத்துறையின் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 5 அலுவலர்களுக்கு அவ்வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட, நீர்வள ஆதாரத்துறையின் தலைமைப் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 55 லட்சத்து 53 ஆயிரத்து 940 ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 4 டோயோட்டா இன்னோவா கிரிஸ்டா வாகனங்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 91 லட்சத்து 46 ஆயிரத்து 60 ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 14 டோயோட்டா இட்டியோஸ் வாகனங்கள் என மொத்தம் 1 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 18 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

புதுடெல்லியில் 11.1.2020 அன்று நடைபெற்ற ஸ்காச் விருது வழங்கும் விழாவில், திருவள்ளூர் மாவட்டத்தில் “நீர்வளம் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு” நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வளம் சேகரிப்புக்கான மும்மாரி-Giving Life to Irrigation and temple tanks எனும் முன்முயற்சிக்காக “நீர்” என்ற தலைப்பின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட ஸ்காச் தங்க விருதினை, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் க.சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், நீர்வள ஆதாரத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.ராமமூர்த்தி, தலைமைப் பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) பி.ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.