சிறப்பு செய்திகள்

நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக அதிகரிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை

நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், கலைமாமணி விருதுக்கு இனி 5 பவுன் பொற் பதக்கம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கலைமாமணி விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-

இயல், இசை, நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை சிறப்பிக்க தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த இனிய நிகழ்ச்சியிலே பங்கு பெற்றிருக்கின்ற அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் திராவிட பொன்னாடே கலை வாழும் தென்னாடே இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் இயங்கும் செந்தமிழ் நாடே என்றார் கவியரசு கண்ணதாசன்.அவரது பாடல் வரிகளுக்கு ஏற்ப பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் பல அரசர்கள் தமிழ் மொழியையும், கலைகளையும், இலக்கியத்தையும், பண்பாட்டினையும் வளர்க்க அரும் பாடுபட்டார்கள்.

மதுரையில் முத்தமிழ் சங்கத்தை நிறுவி பல தமிழ் நூல்கள் வெளிவருவதற்கு வழிவகுத்தனர். இதன் மூலம் பல்வேறு சங்கத்தமிழ் நூல்கள் எழுதப் பெற்றும், தொகுக்கப் பெற்றும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டன. நாடகத் தமிழ் நன்கு வளர்க்கப்பட்டு, மக்களுக்கு பொழுதுபோக்கு, தேசப்பற்று, சமுதாய நெறிகளை விளக்கும் பல்வேறு நாடகங்கள் நடத்தப்பட்டன. இதுவன்றி, இசைக் கலைகள், கிராமியக் கலைகள், நாட்டியக் கலைகள் என பல கலைகளின் பிறப்பிடமாக தமிழ்நாடு திகழ்கின்றது.

இயல், இசை, நாடகத் துறைக்கு தன்னையே அர்ப்பணித்து தொண்டாற்றும் கலைஞர்களை ஆதரித்து அவர்களின் நல்வாழ்விற்காக அக்கால தமிழ் மன்னர்கள் பெரும் பொருளுதவி செய்தார்கள். எடுத்துக்காட்டாக வள்ளல் அதியமான் என்ற மன்னர், தமிழ் மொழி நீண்ட காலம் தழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கில் தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஒளவையாருக்கு அளித்து மகிழ்ந்தார்.

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் கலைஞர்களின் நலன் காத்தவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில், நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத் திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

கலையும், பண்பாடும் ஒன்றோடு ஒன்றாக பிணைந்தவை. தமிழ்நாட்டின் மரபுக் கலைகளின் வழியாக பண்பாட்டினை பாதுகாத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும், இசைக்கலை, நாடகக்கலை, நாட்டியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகியவைகளை இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் கவின்கலைக் கல்வி பயிலகங்கள் வாயிலாக கொண்டு செல்லவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு கலைத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் ‘கலை பண்பாட்டுத் துறை’ என்ற ஒரு தனித்துறை டிசம்பர் மாதம் 1991-ம் ஆண்டு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் துவக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்ற அமைப்பு நமது மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போதுமான நிதியுதவி வழங்கி, தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்கி அவற்றை மீட்டெடுத்தல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பாரம்பரிய கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் மேற்கொண்டு வருகின்றது.

கலைகளையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் செயல்படுத்தப் படும் முக்கிய திட்டங்களை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். நலிந்த நிலையில் வாழும் 500 கலைஞர்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 14,063 கலைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலங்களிடையே கலைக் குழுக்களைப் பரிமாற்றம் செய்யும் திட்டத்தின்கீழ், இதுவரையில் 63 தமிழகக் கலைக் குழுக்கள் வெளி மாநிலத்திற்குச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். பல்வேறு கலை நிறுவனங்களின் மூலம் கலை நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பளித்து அதன் மூலம் திறமை மிக்க இளம் கலைஞர்களுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும் திட்டத்தில் இதுவரையில் 1,972 இளம் கலைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் பண்பாட்டினை சித்தரித்துத் தயாரிக்கப்படும் சிறந்த தமிழ் நாடகங்கள், நாட்டிய-நாடகக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் 47 நாடகங்களுக்கும், 35 நாட்டிய-நாடகக் குழுக்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.அரும்பெரும் கலை நூல்களை வெளியிட நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், 109 நூல்களை வெளியிட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடக கலைஞர்கள் பயன்பெறும் நோக்கில் கலை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், கலைத் துறையின் மேம்பட்ட வளர்ச்சிக்காக சேவை செய்த கலைஞர்களுக்கும், மாநில அளவில் கலைக்கு தன்னலமற்ற சேவையாற்றி கலைத் தாயின் மகுடத்தின் ஒரு மணியாக திகழ்ந்த கலைஞர்களின் சேவைகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘கலைமாமணி’ என்ற உயரிய விருதினை இந்த மாமன்றம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

தற்போது இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், கிராமியக் கலை, ஓவியம், சிற்பம், விகடம் ஆகிய கலைப் பிரிவுகளையும், அவற்றின் உட்பிரிவுகளையும் சார்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைப் பிரிவுகளைச் சாராத பண்பாட்டுக் கலை பரப்புநர், ஒப்பனைக் கலைஞர், இசைக் கருவி தயாரிப்புக் கலைஞர் போன்ற கலைப் பிரிவுகளுக்கும் “கலைமாமணி” விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 1,594 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், இன்று நடைபெறும் இந்த சீர்மிகு விழாவில் இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், 8 மூத்த கலைஞர்களுக்கு அவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, தலா 25 ஆயிரம் ரூபாய் பொற்கிழி, கலை வளர்ச்சிக்கு பாடுபட்ட மூன்று தன்னார்வ நிறுவனங்களுக்கு கேடயம், சிறந்த முறையில் செயல்பட்டு வரும் ஒரு நாடகக் குழுவிற்கு சுழற்கேடயம், புகழ் பெற்ற இயல், இசை,நாட்டியக் கலைஞர்களுக்கு முறையே பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரஸ்வதி ஆகியோர் பெயரில் ஒன்பது கலைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், பட்டயமும், இன்று இந்த விழாவில் வழங்கப்படவுள்ளன. முதிய கலைஞர்களுக்கு அவர்கள் செய்த சேவைக்காகவும், வளர்ந்து வரும் இளைய இளைஞர்கள், ஊக்கமுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் இங்கே விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நம் நாட்டு விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களும், நமது மொழி காக்க நடைபெற்ற போராட்டங்களும் வெற்றியடைந்ததில் கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. நாட்டு மக்களிடையே மொழி உணர்வு, சுதந்திர உணர்வு ஏற்படுவதற்கு பல்வேறு இசைக் கருவிகளுடன் கலைஞர்கள் வீதிதோறும் பாடிய பாடல்களும், நாடக மேடைகளில் பேசிய வசனங்களும் அடிப்படையாக அமைந்தன.

கலைஞர்கள், நாம் நாட்டுக்காக வாழ்கிறோம் என்பதையும், நமது கலை, நாட்டு மக்களுக்காக, மக்களை மகிழ்விப்பதற்காகத் தான் என்பதையும் உணர்ந்து, கலைக்கு உயரிய சேவையையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப, கலைத் துறையில் உலகளவில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கலைஞர்கள், தான் கற்ற கலையின் ஆரம்ப நிலையிலேயே நிற்காமல், மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்கள் திறமைகளை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டே, தான் பயின்ற கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அவ்வாறு பெற்ற நிபுணத்துவத்தை தங்கள் கலைகளில் முறையாகக் கையாண்டு தாங்கள் சார்ந்த கலைக்கு மெருகேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதைக் கூறும் போது, எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

இன்று ‘கலைமாமணி பட்டம்’ பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் திறமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு நீங்கள் ஏற்றுக் கொண்ட கலைக்கு சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே, இங்கே இருக்கின்ற கலைஞர் பெருமக்கள் சில கோரிக்கைகளை வைத்திருக்கின்றார்கள். இங்கே கலைமாமணி விருது வழங்குகின்றபொழுது இந்தக் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்தக் கலைஞர் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவினுடைய அரசால் அறிவிப்புகளை வெளியிட விரும்புகின்றேன்.

கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக இனி 5 சவரன், அதாவது 40 கிராம் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் அம்மா அவர்கள் பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 சவரன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.