தமிழகம்

புதிய கல்வி கொள்கையில் அரசு திடமாக இருக்கிறது – முதலமைச்சர் திட்டவட்டம்…

சேலம்:-

புதிய கல்வி கொள்கையில் அரசு திடமாக இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில், பொதுமக்களிடம் கருத்து கேட்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று கல்வியாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதே?

பதில்:- வெளிப்படைத் தன்மையோடு தான் அரசு இருக்கின்றது. பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களே. இப்பொழுது ஊடகமும், பத்திரிகையும் அடுத்த நொடியே மக்களுக்கு செய்தி செல்கின்ற அளவிற்கு தமிழகம் ஒரு விழிப்புணர்வு உள்ள மாநிலமாக இருக்கின்றது. அம்மாவின் அரசைப் பொறுத்தவரைக்கும் கல்விக் கொள்கையிலே திடமாக இருக்கின்றது. மொழிக் கொள்கையை பொறுத்தவரைக்கும், நாங்கள் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என்று தெளிவாக சுதந்திர தின விழாவில் நான் தெளிவு படுத்தியிருக்கிறேன்.

கேள்வி:– குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையனும் அனைத்து மாவட்டங்களும் பிரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார், அதைப்பற்றி …

பதில்:- பெரிய மாவட்டங்களெல்லாம் இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்று பொது மக்களிடத்திலிருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளிடத்திலிருந்தும் கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில், பெரிய மாவட்டங்களெல்லாம் முதலிலே பிரிக்கப்படுகின்றது.

கேள்வி:- பள்ளிகளில், ஜாதி கயிறு கட்டுவது என்பது குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது…

பதில்:- ஒன்றும் குழப்பமில்லை, பத்திரிகைகளுக்கு வந்திருக்கும் செய்தியின் அடிப்படையில், அவர் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.