தற்போதைய செய்திகள்

தமிழுக்கு பெருமை சேர்க்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. : அமைச்சர் நிலோபர் கபீல் பெருமிதம்

ராணிப்பேட்டை

தமிழுக்கு பெருமை சேர்க்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்று அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார்.
வேலூர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் கழக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தமிழ் மொழிக்காக
உயிர் நீத்த தியாகிகளுக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. புரட்சித்தலைவர், அம்மா ஆகியோர் தமிழினத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் மிகவும் பாசம், பற்றுக் கொண்டவர்கள். தமிழ் மொழியில் சில கடினமான எழுத்துக்கள் இருந்தன.அதை தந்தை பெரியார் சீர்திருத்தங்கள் செய்தார். திமுக ஆட்சியில் இருக்கும்போது கருணாநிதியிடம் தந்தை பெரியார்இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் பெரியாரின் பேச்சை கருணாநிதி கேட்கவில்லை.

1977-ல் முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெரியாரின் தமிழ்மொழி எழுத்து சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தார். அரசுத்துறை, பள்ளிகளில் தமிழ் மொழி எழுத்துக்கள் சீர் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவினார். பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். அண்ணாவின் வழியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஒரே வாரிசு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சையில் நடத்தி தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தார். ஆனால் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி ஏன் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தவில்லை?

தமிழ் மொழி பெயர் சொல்லி கொள்ளையடித்தாரே, தவிர, தமிழினத்திற்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் எதுவும் செய்யவில்லை. கருணாநிதி கோவையில் செம்மொழி மாநாடு என்று சொல்லி கனிமொழி மாநாடு நடத்தினார். அப்போது ஆதிதிராவிடர் நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை செம்மொழி மாநாட்டிற்கு விரயமாக்கினார். தமிழினத்திற்கும், தமிழ்மொழிக்கும் துரோகம் செய்தவர் கருணாநிதி. இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக, கொன்று குவித்ததை வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டவர் கருணாநிதி.

தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளான காவிரி, பாலாறு, முல்லைப்- பெரியாறு, கச்சத்தீவு ஆகிய விவகாரங்களில்
தமிழின மக்களுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அதற்கான நிதியை பேரறிஞர் அண்ணாவின் மனைவியான ராணி அம்மாளிடம் வழங்கினார். 2006- 2011-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது டெல்லி சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூபாய் 50 லட்சம் அனுப்புமாறு கருணாநிதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தமிழின துரோகி கருணாநிதி ஒரே தவணையில் ரூபாய் 50 லட்சம் வழங்கவில்லை‌. பிறகு 2011-ல் ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் டெல்லி சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரே தவணையில் ரூபாய் 50 லட்சத்தை வழங்கி தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் வந்த அம்மா அவர்கள் தமிழினத்திற்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டார். அம்மாவின் வழியில் வந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்மொழி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூபாய் 10 கோடி வழங்கி தமிழ் மொழியை அயல்நாட்டு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.திருக்குறள், பாரதியார், பாரதிதாசன், பாடல்களை சீனா மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்ப்புக்காக 1 கோடியே 36 லட்சம் நிதி உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நலிந்த தஞ்சை பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி, சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிப்பு செய்தது,
ஆண்டுதோறும் 32 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது, சிறந்த இலக்கியம் படைக்க மகளிருக்கு அம்மா இலக்கிய விருது , வழங்கி தமிழ் மொழி வளர்ச்சிக்காக அம்மாவின் அரசு பாடுபட்டு வருகிறது. தமிழ்மொழி வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் கழக அரசுக்கு மட்டும்தான் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த அருகதை உள்ளது. தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் துரோகம் செய்யும் திமுக கட்சிக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தும் தகுதி கிடையாது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல் கூட்டத்தில் பேசினார்.