தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூலம் 1.10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தமிழக அரசு சார்பில் ரூ.1.50 கோடியில் சி.பா.ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சி.பா.ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி முடிந்து விட்டது. இம்மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிப்ரவரி 22-ந்தேதி திறந்து வைக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட உடன்குடி அனல்மின் நிலைய பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்ததவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல கடந்த 20-ந் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.49 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளார். இந்த பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூலம் நேரடியாக 10,000 பேருக்கு வேலை வாய்ப்பும், மறைமுகமாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. இது தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

இந்த ஆய்வின்போது செய்தித்துறை இயக்குனர் சங்கர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முள்ளக்காடு செல்வகுமார், திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜ், மாவட்ட அம்மா பேரவை ஆறுமுகநேரி ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பி.ஆறுமுகநயினார், திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.