தற்போதைய செய்திகள்

இரவு- பகல் பாராது குனிந்து படித்தால் வாழ்நாள் முழுவதும் நிமிர்ந்து வாழலாம் : மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுரை

நாகப்பட்டினம்

இரவு, பகல் பாராது குனிந்து படித்தால் வாழ்நாள் முழுவதும் நிமிர்ந்து வாழலாம் என்று மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுரை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி எஸ்.எம்.எச். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 2008 மாணவ- மாணவிகளுக்கு ரூ.79 லட்சத்து 65 ஆயிரத்து 828 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக சிறந்த மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணத்தோடு அனைத்து திட்டங்களையும் அனைத்து உதவிகளையும் அனைத்து சலுகைகளையும் கணக்கில் இல்லாத அளவுக்கு செய்து கொடுத்தார். அதிலும் குறிப்பாக பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவரின் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.

அடிப்படை கல்வியாக இருந்தாலும் சரி அது உயர்கல்வி ஆக இருந்தாலும் சரி அது தொழில் நுட்ப கல்வியாக இருந்தாலும் சரி அந்த கல்வியில் மேம்பட்ட கல்வியை நம்முடைய குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்கிற ஒரு மிகப்பெரிய கனவு கண்டார் அம்மா. எந்த சூழ்நிலையிலும் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்முடைய குழந்தைகளுக்கு வரவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை பாடப் புத்தகங்கள் உங்களுக்கு வழங்கப்படுகிறது. மதிய உணவு வழங்கப்படுகிறது.

திருமண உதவிக்கு ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம் தரப்படுகிறது. சீருடை தரப்படுகிறது எல்லாமே உங்களுக்கு வழங்கப்படுகிறது. இது எதற்காக வழங்கப்படுகிறது. ஒரு குழந்தை தவிக்க கூடாது எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில் தான் உங்களுக்கு இத்தனை உதவிகளும் வழங்கப்படுகிறது இத்தனை உதவிகளையும் பெறுகிற என்னுடைய மாணவச் செல்வங்களில் படிக்க வேண்டும். இரவு பகல் பார்க்காமல் குனிந்து படித்தால் வாழ்நாள் பூராக நிமிர்ந்து வாழலாம்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி, முதன்மைக் கல்வி அலுவலர் க.குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் மகாராணி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.