வேலூர்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அருகதை திமுகவுக்கு கிடையாது அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

வேலூர்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் தகுதி தி.மு.க.வுக்கு கிடையாது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

தமிழ் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அருகதை திமுகவிற்கு கிடையாது என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி வேலூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் வேலூரில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

வேலூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் அண்ணா கலையரங்கம் அருகில் மாவட்ட மாணவரணி செயலாளர் வி.எ.பிரகாஷ் தலைமையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, கழக செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலி, தலைமை கழக பேச்சாளர்கள் பாஸ்கர், அமுதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

தமிழ் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அருகதை கழகம் என்ற பேரியக்கத்திற்கு மட்டும்தான் உள்ளது. தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அருகதை திமுகவிற்கு கிடையாது. தமிழ் மொழி உலகின் தலைசிறந்த மொழியாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க காங்கிரஸ் கட்சி 1937-ம் ஆண்டு முயற்சி செய்தது.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மாணவ சமுதாயம் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தினார்கள். தாளமுத்து, நடராசன், சிவலிங்கம் தண்டபாணி உள்ளிட்ட பலர் இந்தி திணிப்பை எதிர்த்து தனது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அதனால் இந்தி திணிப்பு கைவிடப்பட்டது.

தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளான காவேரி, பாலாறு முல்லைப் பெரியாறு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை தமிழின துரோகி கருணாநிதி. அண்ணா சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழினத்திற்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தார்கள்.

புரட்சித்தலைவர் தமிழுக்காகவே தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவி தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு நடத்தாமல் தனது குடும்ப நலத்திற்காக கோவையில் செம்மொழி மாநாடு என்று சொல்லி கனிமொழி மாநாடு நடத்தினார். தமிழினத்திற்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் கருணாநிதி எதுவும் செய்தது கிடையாது. தமிழ் மக்களுக்காக பாடுபடாமல், தன் மக்களுக்காக பாடுபடுபவர் கருணாநிதி.

2011-ல் முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.50 லட்சத்தை ஒரே தவணையில் வழங்கினார். புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வருகின்றனர்.சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர மத்திய அரசிடம் கழக அரசு வலியுறுத்தியுள்ளது. விரைவில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.