தற்போதைய செய்திகள்

திருவாரூரில் வெங்காயம் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்தது – ஆர்வத்துடன் வாங்கி சென்ற மக்கள்

திருவாரூர்:-

அரசின் நடவடிக்கையால் வெங்காயம் வரத்து அதிகரித்ததால், திருவாரூரில் விலை குறைந்து கிலோ ரூ.50 க்கு விறபனையானது. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த வெங்காயத்தின் விலை நேற்று முதல் கிலோ ரூ.50 என்ற விலையில் விற்க துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இந்தியாவில் பெரிய வெங்காயம் அதிகமாக விளையக்கூடிய கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடப்பாண்டில் பெய்த கனமழை காரணமாக வெங்காய பயிர்கள் பழகியதால் உற்பத்தி குறைந்தது.

இதன் காரணமாக கிலோ ரூ.20 க்கு விற்பனையாகி வந்த பெரிய வெங்காய விலை பல மடங்கு விலை உயர்ந்து அதிகபட்சமாக ரூ.200 வரை கடந்த ஒரு மாதமாக விற்பனையாகி வந்தது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இதே நிலை நீடித்த நிலையில் வீடுகளில் வெங்காயம் என்பது சமையலுக்கு சேர்க்கப்படாமல் இருந்து வந்தது.

மேலும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் விலை உயர்வு ஏற்பட்டதற்கு மொத்த வியாபாரிகளின் பதுக்கலும் ஒரு காரணம் என்று கூறப்பட்ட நிலையில் இந்த வெங்காயத்தின் விலை ஏற்றத்தை அடுத்து அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் சென்னை உட்பட ஒரு சில நகரங்களில் மானிய விலையில் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மத்திய அரசு துருக்கி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும். பெரிய வெங்காயத்தில் முதல் கட்டமாக 500 டன் என்ற அளவில் வரும் 13 மற்றும் 14- ம் தேதிகளில் தமிழகத்திற்கு வர உள்ளதாகவும், அதனை மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளதாகவும் நேற்று முன்தினம் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வெங்காயத்தின் விலையை கேட்டபோது இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் விலை ஏற்றம் இருந்து வந்ததால் வீடுகள் மட்டுமின்றி ஓட்டல்களிலும் வெங்காயம் இல்லாமல் சமையல் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டது.

மேலும் தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.200, ரூ.180, ரூ.160, ரூ.140, ரூ.120 மற்றும் ரூ.100 என பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பெரிய வெங்காயமானது எகிப்து உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது தமிழகத்திற்கு தனியார் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனைக்கு வரத் துவங்கியது.

இதையடுத்து பதுக்கல் வெங்காயமும் தற்போது வெளிவர துவங்கியதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று  கிலோ ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரக பல்லாரி வெங்காயத்தின் விலையானது நேற்று கிலோ ரூ.50 ஆக குறைந்து காணப்பட்டது. இதனையடுத்து இந்த வெங்காயத்தினை திருவாரூர் கடைத்தெரு உட்பட மாவட்டம் முழுவதும் கடைத்தெருக்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.