திருவண்ணாமலை

புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு

திருவண்ணாமலை

தமிழகத்துக்கு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தந்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழகத்துக்கு முக்கியத்துவம் தந்து மருத்துவக் கல்லூரிகளை தந்த பாரத பிரதமருக்கும் நன்றி.

தமிழகம் பல துறைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. சென்னையில் மூன்றாவது கண்ணாக பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை கட்டுகோப்பாக காவல்துறை வைத்துள்ளது. 5 மற்றும் 8-வது படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை வரவேற்கிறேன், மாணவர்கள் ஆரம்பக்கல்வி முதலே பொதுத்தேர்வுகளை சந்திக்கும் போது 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை எந்தவித பதட்டமும் இன்றி எழுதுவார்கள்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று வலுவான கட்சியாக உள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியுள்ளவர்களுக்கு தான் அச்சட்டம் பொருந்தும். ஆகையால் நாம் கவலை படத் தேவையில்லை.

இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறினார்.