சிறப்பு செய்திகள்

கேபிள் டிவி கட்டணம் விரைவில் குறைப்பு – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்…

சென்னை:-

கேபிள் டிவி கட்டணத்தை குறைப்பது குறித்து ஒரிரு நாட்களில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நல்லமுடிவை அறிவிப்பார் என்று அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவராக பொறுப்பேற்ற அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சென்னை எழும்பூரில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு, தலைவராக பொறுப்பேற்று கொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அரசு கேபிள் டிவி மூலம் கிராமப்புற மக்களிடையே சென்றடைய வேண்டும் என்பதை தெரிவித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எனக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளார் டிஜிட்டல் தொழில் நுட்பம்
வரும்போது மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டிய சூழலில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்திற்கு கேபிள் சேவையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டு பெற்றுள்ளார். ஒவ்வொரு துறையிலும் பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன அந்த திட்டங்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

குறைந்த விலையில் சேவை வழங்கவே இந்த அரசு கேபிள் திட்டத்தை அம்மா கொண்டு வந்தார் அவரது கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் அம்மாவின் அரசு முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மூலம் கேபிள் டிவியின் செயல்பாடுகள் மற்றும் அரசு திட்டங்களை கேபிள் டிவி வழியாக
கொண்டு செல்வது குறித்து கேபிள் ஆப்ரேட்டர்களை வரவழைத்து கருத்துக்களை கேட்டிருக்கிறேன். தாசில்தார்களுடனும் ஆலோசனை நடத்தியிருக்கிறேன் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களை மிரட்டுபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால்
தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களுக்கு எதிரான தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியிடப்படுவதால் முதல்வர் கவலைப்படுவதில்லை. அரசின்
திட்டங்களை காண்பிப்பதன் மூலம் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் குறைந்து விடமாட்டார்கள். மாறாக அதிகரிப்பார்கள். கட்டண தொலைக்காட்சிகள் ஏற்கனவே தொடர்பில் இருக்கின்றவர்கள் தான். அரசு கேபிள் டிவி தரமாக இருக்க வேண்டும். அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம்.

கேபிள் டிவி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதுகுறித்து ஆராய்ந்து விரைவில் நல்ல முடிவை முதல்வர் அறிவிப்பார். அனைவரின் நலனும் காக்கப்பட வேண்டும். அரசும் லாபத்தில் செயல்பட வேண்டும் என்பதே நோக்கம் என்றும் முதல்வர் இதுகுறித்து இரண்டொரு தினங்களில் நல்ல அறிவிப்பை வெளியிடுவார். இனி புத்துணர்ச்சி பெற்று கேபிள் டிவி மக்களுக்கு சேவை செய்யும். அனைத்து பகுதிகளிலும் செட் ஆப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு கேபிள் டி.வி. நிறுவன தலைவரும், அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.