தற்போதைய செய்திகள்

கழக அரசின் திட்டங்களை யாராலும் குறைகூற முடியாது – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

திருப்பூர்

கழக அரசின் திட்டங்களை யாராலும் குறை கூற முடியாது என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றிய கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அடிவள்ளி எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அடிவள்ளி எம்.எஸ்.முரளி தலைமை வகித்தார். ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டி.வி நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செ.ம.வேலுச்சாமி, தலைமை கழக பேச்சாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை நாம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். உண்மையில் புரட்சித்தலைவர் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்ப மாட்டார். மாறாக ஏழை, எளியவர்களுக்கு உதவி புரிய விரும்புவார். அதேபோல் தான் இதயதெய்வம் அம்மா அவர்களும் தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டார். ஏழை எளியவர்களுக்கு உதவி புரியவே விரும்புவார். எனவே தான் நாம் அவர்களின் எண்ணப்படி பிறந்தநாளில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு உதவிகள் புரிந்து வருகிறோம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தின் மூலம் படித்தவர்கள் மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்கறிஞராகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் வந்திருக்கிறார்கள். இத்தகைய பெருமைமிக்க இந்த சத்துணவு திட்டத்தினை யாராவது குறை கூற முடியுமா? இன்றுவரை அனைவரும் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.

புரட்சித்தலைவர் மறைவுக்கு பின்பு முதலமைச்சரான கருணாநிதி, புரட்சித்தலைவர் கொண்டு வந்த சிறப்பு வாய்ந்த அனைத்து திட்டங்களையும் பல்வேறு காரணங்களை கூறி நீக்கினார். ஆனால் சத்துணவு திட்டத்தினை மட்டும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புரட்சித்தலைவர் சினிமாவில் நடிக்கும் போது நல்ல பல விஷயங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு நல்ல விஷயங்களை திரைப்படத்தில் சொன்னதோடு நடித்தும் காட்டினார். இந்தியாவிலேயே தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. ஏழை எளியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக கழக அரசு விளங்குகிறது. நீங்கள் என்றென்றும் கழக அரசுக்கு துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பி.சத்தியபாமா, ஒன்றியக்குழு தலைவர் எம்.சுகந்தி முரளி, ஒன்றியக்குழு துணை தலைவர் பி.சி.புஷ்பராஜ், ஊராட்சி கழக செயலாளர் எம்.ரங்கநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கு.பெரியசாமி, ஆர்.செந்தில்குமார் ஒன்றிய அவைத்தலைவர் ஜி.வெங்குடுபதி, ஒன்றிய கவுன்சிலர் ஏ.முருகன், கல்யாணி மணிகண்டன், கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வி.ராமநாதன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் எ.நாகராஜ், ஊராட்சி கழக செயலாளர்கள் அன்பர்ராஜன், முருகானந்தம், பி.லட்சுமணசாமி, பண்ணை கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.