சிறப்பு செய்திகள்

பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் தி.மு.க.வுக்கு மரண அடி கொடுங்கள் – வேலூர் வாக்காளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்…

வேலூர்:-

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் தி.மு.க.வுக்கு மரண அடி கொடுங்கள் என்று வேலூர் வாக்காளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் இந்திராநகரில் கழக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்து பேசியதாவது:-

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பொதுவாழ்க்கையில் புரட்சித் தலைவரின் கரம் பிடித்து காலடி எடுத்து வைத்தவர். அரசியல் தெரிந்தவர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் 50 ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் பெற்று பணியாற்றி வருகிறார் .மக்களின் தேவைகளை புரிந்து கல்வி ,மருத்துவம் ,வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்கள் சேவை திட்டங்களை உருவாக்கக்கூடிய நீண்ட நெடிய அனுபவம் பெற்றவர். அதில் சாதித்து காட்டியுள்ளார்.மக்களின் பிரச்சினைகள், தேவைகளை நிறைவேற்ற முதல்வர், துணை முதல்வர், பிரதமர் ஆகியோரை நேரடியாக சந்திக்கும் ஆற்றல், தகுதி படைத்தவர்.

எதிர்க்கட்சி வேட்பாளராக நிற்கக்கூடிய கதிர் ஆனந்த், துரைமுருகனின் மகன் என்பதைத் தவிர பொதுவாழ்க்கையில் அவருக்கு வேறு எந்த அனுபவமும் இல்லை. ஒரு பிரச்சினையை எப்படி அணுக வேண்டும், வளர்ச்சித் திட்டங்களை எப்படி பெற வேண்டும் என்று அவரிடம் கேட்டால் அவர் தன்னுடைய தந்தை பெயரைத்தான் சொல்வாரே தவிர வேறு ஒன்றும் தெரியாது. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவருக்கு வழி இருக்காது. ஆகவே மக்கள் அவரிடத்தில் எந்த கோரிக்கை கொடுத்தாலும் அப்பாவை பாருங்கள் என்றுதான் சொல்வாரே தவிர எந்த பிரச்சினைக்கு அவர் எந்த துறையை சந்திக்க வேண்டும் என்பது தெரியாது.அவருக்கு தெரிந்ததெல்லாம் அவருடைய அப்பா தவிர வேறு எதுவும் தெரியாது .

திமுகவினர் பிள்ளை பிடிப்பது போல, குடுகுடுப்பைக்காரர்கள் போல நாம் அசந்து விடும் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து விண்வெளியில் கூட வீடு கட்டித் தருவோம் என மக்களிடத்தில் பொய் சொல்லி வாக்குகளை பெறுவார்கள். தேர்தலுக்குப் பிறகு விண்வெளியில் எந்த இடமும் இல்லை. அதனால் வீடு கட்டி தர முடியாது என்று ஏமாற்றுவார்கள். நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் சொல்லி மக்களை திசைதிருப்பி ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பொய் பித்தலாட்டங்கள் தான்,. மக்களை ஏமாற்றி நாட்டில் கொள்ளை அடிப்பது மட்டும் தான் தெரியும் .குடும்ப அரசியலை திமுகவினரே விரும்பவில்லை.

இளைஞர் பட்டாளம் நம்மிடம் அதிகமாக உள்ளது . சாதி மத வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க தயாராகிவிட்டனர். மக்களுடன் மக்களாக இருந்து சேவை செய்து மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்ட தொண்டர்கள் படைத்த ஒரே இயக்கம் கழகம் என்ற பேரியக்கம்தான். தி.மு.க.வின் பொய், பித்தலாட்டங்களை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

வீடு வழங்கும் திட்டம்,. மரக்கன்றுகள் நடுதல், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட நகர, கிராம உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விவசாயிகள், தொழிலாளிகள் பொதுமக்கள் ஆகியோரின் அனைத்து தேவைகளை பூர்த்தி செய்த ஆட்சிதான் அம்மாவின் ஆட்சி. புரட்சித்தலைவி அம்மாவை தவிர வேறு யாராலும் இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற முடியாது.
நடந்து முடிந்த தேர்தலில் குட்டையை வைத்து மீன் பிடித்த கதை போல் மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்ற திமுகவினருக்கு வரும் தேர்தலில் மரண அடி வழங்க வேண்டும்.

மக்களை ஏமாற்றுவதே திமுகவின் லட்சியம். கழகக் குடும்பங்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும் . கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக பணிபுரிந்து புதிய வாக்காளர்களை அழைத்து அவர்களுக்கு அம்மாவின் அரசின் சாதனைகளை விளக்கி அவர்களுடைய ஓட்டை நாம் பெற வேண்டும். நடுநிலையாளர்களின் வாக்குகளும் தவறாமல் பெற வேண்டும்.

சாமானிய, எளிய தொண்டனான முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கரத்தை வலுப்படுத்த வரும் தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்திய திருநாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல். எத்தனையோ தேர்தல் பார்த்து இருக்கிறோம். ஆனால் தடைபட்ட தேர்தலை இப்பொழுது தான் பார்க்கிறோம். இந்த தேர்தல் ஏன் தடை பட்டது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். திமுகவினரின் அராஜகம், பணம் பட்டுவாடா செயல்தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் அலுவலகத்தில் இதய தெய்வம்புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.