தமிழகம்

சாத்தனூர் அணையிலிருந்து 5-ந்தேதி தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை

சாத்தனுர் அணையிலிருந்து 5-ந்தேதி தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2019-2020-ம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 7543 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே 302.40 மி.க.அடி மற்றும் 453.60 மி.க.அடி ஆக மொத்தம் 756 மி.க.அடிக்கு மிகாமல் 5.2.2020 முதல் 10.3.2020 வரை 35 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்துவிடவும் திருக்கோவிலூர் அணைக்கட்டு பெண்ணையாறு பாசன பழைய ஆயக்கட்டிற்கு 5000 ஏக்கருக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு 1200 மி.க.அடி நீரினை நீர்ப் பங்கீடு விதிகளின்படி பிப்ரவரி முதல் தேதி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஒரே தவணையில் தேவைப்படும்பொழுது தண்ணீர் திறந்து விடவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறச்சி மாவட்டங்களில் உள்ள 12543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.