தற்போதைய செய்திகள்

தவறு நடந்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து திசை திருப்புகிறது தி.மு.க. : ஐ.பெரியசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி

சென்னை

பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் தவறு செய்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து தி.மு.க. மக்களை திசை திருப்புகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பாரத் நெட் டெண்டர் சம்பந்தமாக தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியின் குற்றச்சாட்டுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரத் நெட் டெண்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா ? என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சவால் விடுத்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை பழி வாங்குவதாகவும், பாரத் நெட் உள்கட்டமைப்பு திட்டம் பற்றி தவறான தகவல்களைக் கூறியும் ஸ்டாலின் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ஏற்கனவே நான் தெளிவாக பதில் அளித்திருக்கிறேன். அந்த விளக்கத்தினை கண்ட பின்னர், தான் கிளப்பிய சர்ச்சை, தனக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்த எதிர்க்கட்சித் தலைவர், தன் கட்சியில் உள்ள ஒருவரை விட்டு, சில வினாக்களை எழுப்பி, சவால் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட வைத்துள்ளார்.

முக்கியமாக, அப்போதைய அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய உமா சங்கரை, திமுக-வின் குடும்பம் நடத்திய தனியார் தொலைக்காட்சிக்கு சாதகமாக செயல்படவில்லை என்ற காரணத்தினால் திமுக அரசு தற்காலிகப் பணி நீக்கம் செய்ததையும், மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப் பணத்தில் அமைக்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. முடக்கப்பட்டதையும் நான் சுட்டிக்காட்டி இருந்தேன். அதற்கு ஐ.பெரியசாமி எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. அப்போது ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை ?

பெரும் ஒப்பந்தங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்போது, அந்த ஒப்பந்தப்புள்ளியில் உள்ள பல்வேறு தகுதி விதிமுறைகள் மற்றும் நிதி விதிமுறைகள் குறித்து பல்வேறு ஒப்பந்ததாரர்கள் தமது கருத்துகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க வாய்ப்பு அளிப்பது ஒரு இயல்பான நடைமுறை. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பின்னர், முதலில் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்களை அழைத்து ஒப்பந்தப்புள்ளிக்கு முந்தைய கூட்டம் நடத்தப்படும்.

இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பின், அந்த மாற்றங்களை செய்யும் அதிகாரம் ஒப்பந்தப்புள்ளியை ஏற்கும் அலுவலருக்கு உண்டு. இவ்வாறு விதிமுறைகள் மாற்றப்படும்போது, அவை குறித்து மீண்டும் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பும் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் உண்டு. இதன்படி, ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை இறுதி நாளுக்கு 48 மணி நேரம் முன்பு வரை கூட மீண்டும் TAA-வால் மாற்றி அமைக்கலாம்.

இதற்கு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தப்புள்ளி குறித்து, Pre Bid Meeting கூட நடத்தப்படாத நிலையில், தவறு நடந்து விட்டதாக கற்பனை செய்து கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது, மக்களை பொய் பிரச்சாரம் மூலம் திசை திருப்ப முயலும் அரசியலை திமுகவினர் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

பாரத் நெட் திட்டம் என்பது, நவீன தொழில்நுட்ப நுணுக்கங்கள் நிறைந்த ஒரு புதுமையான திட்டம். அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு மக்கள் நலன் சார்ந்த பெரிய திட்டமாகும். இத்திட்டத்தில் நிலத்தடியில் போடப்படும் கம்பிவடம் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, மிக நல்ல தரமாக உடையதாக இருக்க வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊரக மக்களும் தொழில்நுட்பத் திறனில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உறுதியான லட்சியத்துடன் செயல்படும் அம்மாவின் அரசு, நமது மாநிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மக்கள் நலன், உறுதியான தரம் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு அம்மாவின் அரசு முடிவெடுக்கும். அதற்கான நடவடிக்கை தான் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை தேவையின்றி குறை சொல்லி மக்களை திசை திருப்ப முயன்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு திமுக-வினர் தடை கல்லாக இல்லாமல் இருக்க வேண்டும்.

ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்பது மற்றும் அதன் மீது முடிவு எடுப்பதற்கான நடைமுறைகள் பற்றி, ஏற்கனவே வீட்டு வசதித் துறை மற்றும் வருவாய்த் துறையின் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஏன் தெரியவில்லை ? அவரின் நிலை கண்டு சிரிப்பு தான் வருகிறது. தினந்தோறும் அரசின் மீது ஏதாவதொரு குறை சொல்லி வருவதன் மூலம், தாங்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறோம் என்பதை திமுக-வினர் வெளிக்காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்பிரச்சினையைப் பற்றி பேசுகின்றவர்களுக்கு, அவரது கட்சியைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா 2ஜி அலைவரிசை விற்பனையில் நடத்திய முறைகேடுகள் நாடு முழுவதும் நாற்றமடித்தது நினைவுக்கு வரவில்லையா? அப்போது, 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியான 1.10.2007 என்பதை 25.9.2007 என்று மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நிறுவனம் தொடுத்த வழக்கில், “விளையாட்டு தொடங்கிய பிறகு விதிகளை மாற்றுவது போல் உள்ளது” எனத் தெரிவித்து, “இந்த மாற்றம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல” என்று 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்த விபரம், அம்மா அவர்கள் தனது கண்டன அறிக்கையிலேயே கூறியுள்ளார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐ.பெரியசாமி வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது, விதிகளை மீறி வீடுகளை ஒதுக்கித் தந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் இன்னமும், ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணையில் இருந்து வருகிறது.மேலும், 2014-ம் ஆண்டு, மதுரை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி, பல கோடி ரூபாய் சொத்துகளை தனது மகள் மற்றும் உறவினர்களின் பெயரில் மாற்றியதுடன், பின்னர் அந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டு, கொலை நடந்த விவகாரம் தொடர்பாக, ஐ.பெரியசாமியின் மகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் தான் தனது மகளை சிக்க வைத்து விட்டனர் என்று தனது உறவினர்கள் மீதே பழி சுமத்தும் ஐ.பெரியசாமிக்கு, தமிழ்நாட்டு மக்களின் நலன் மீது என்ன அக்கறை இருந்துவிடப் போகிறது? மேலும், இவ்வழக்கு தற்போது சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது.

பாரத் நெட் திட்டத்தை சட்டப்படி முறையாக செயல்படுத்த அம்மாவின் அரசு எடுத்து வரும் முயற்சியை, எந்த முகாந்திரமும் இல்லாமல், சி.பி.ஐ. விசாரணைக்கு விடத் தயாரா எனக் கேள்வி கேட்கும் ஐ.பெரியசாமியின் செயல் அவருடைய அறியாமையையே காட்டுகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.