சிறப்பு செய்திகள்

கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்பு…

பெங்களூரு:-

கர்நாடக மாநில முதலமைச்சராக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையிலும் அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற முறையில் பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால் எதிரும், புதிருமாக இருந்த காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளம் ஒன்றாக கைகோர்த்து எடியூரப்பா தலைமையிலான அரசை கவிழ்த்து விட்டன. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு பெரும்பான்மை இடங்களை பெற்றிருந்ததால் ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே புகச்சல் இருந்து கொண்டே இருந்தது. பல வகையிலும் குமாரசாமிக்கு சித்தராமையா தொல்லை கொடுத்து கொண்டிருந்தார். அதன் உச்சகட்டமாக 14 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்தார்கள். அந்த ராஜினாமா கடிதத்தில் சித்தராமையா அறிவுறுத்தலின் பேரில் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தனர். இதனால் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.

இந்நிலையில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர். குமாரசாமி அரசு மெஜாரிட்டி இழந்து விட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் ஆணை பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு 99 வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 105 வாக்குகளும் கிடைத்தன. இதனால் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைக்க அம்மாநில தலைவர் எடியூரப்பா ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து கட்சி மேலிடத்தின் அனுமதி பெற்று எடியூரப்பா நேற்று மாலை கர்நாடக மாநில முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் முதலமைச்சராக பதவி ஏற்பது இது நான்காவது முறையாகும். எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்கும்படி ஆளுநர் எடியூரப்பாவை கேட்டுக் கொண்டுள்ளார்.