தற்போதைய செய்திகள்

கனிமொழி எம்.பி.யின் கபடநாடகம் தூத்துக்குடி மக்களிடம் எடுபடாது – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

தூத்துக்குடி

கனிமொழி எம்.பி.யின் கபட நாடகம் தூத்துக்குடி மக்களிடம் எடுபடாது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு நேற்று முன்தினம் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 19 உறுப்பினர்களில் 10 ஓட்டுகளை பெற்று அ.தி.மு.க.வை சேர்ந்த கஸ்தூரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கழகத்தின் இந்த வெற்றியை எதிர்த்து கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் கழகத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக கனிமொழி எம்.பி. கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக யெலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ கனிமொழியின் கபட நாடகம் இனி தூத்துக்குடி மக்களிடம் எடுபடாது என்று தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கூறியதாவது:-

அதிமுகவைச் சேர்ந்த கஸ்தூரி 10 வாக்குகளும் திமுகவைச் சேர்ந்த பூமாரி 9 வாக்குகள் பெற்றுள்ளதால் ஊராட்சி ஒன்றிய தலைவராக கஸ்தூரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதன்பி ன்பு நடைபெற இருந்த துணைத் தலைவர் தேர்தலை சந்திக்கவும் தயாராக இருந்தோம். ஆனால் திமுகவினர் தோல்வி பயத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். எதற்கெடுத்தாலும் சாலை மறியல் செய்து மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும் அவர்களை வரும் தேர்தலில் மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள்.

நாங்கள் என்றுமே ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்கக் கூடியவர்கள். வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்ற கோட்பாடு படி நடக்கக் கூடியவர்கள். வெற்றி பெற்றால் சந்தோஷம், தோல்வி பெற்றால் போராட்டம் நடத்துவது திமுகவினருக்கு கைவந்த கலை. தி.மு.க. எம்.பி. கனிமொழியின் கபட நாடகம் இனி தூத்துக்குடி மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.