தற்போதைய செய்திகள்

467 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

மதுரை

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் தலைமையில் நேற்று முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 467 பயனாளிகளுக்கு ரூ.1,25,25,719 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

மக்கள் அதிகாரிகளை அணுகுவதை காட்டிலும், அதிகாரிகள் மக்களை அணுகி குறைகளை தீர்க்க வேண்டும் என்பதே அம்மா அரசின் நோக்கம்.மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை, குறிப்பாக, இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, பூங்கா வசதி, மின்விளக்கு வசதிகள், பேவர்பிளாக் அமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள மாடக்குளம் கண்மாயில் முதலமைச்சர் ஆணைக்கிணங்க குடிமராமத்து பணிகள் ரூ.85 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

முகாமில் 72 பயனாளிகளுக்கு இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை ரூ.8,64,000 மதிப்பிலும், 26 பயனாளிகளுக்கு இந்திரா காந்தி விதவை உதவித்தொகை ரூ.3,12,000 மதிப்பிலும், 21 பயனாளிகளுக்கு விதவை ஓய்வூதிய உதவித்தொகை ரூ.2,52,000 மதிப்பிலும், 17 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.2,04,000 மதிப்பிலும், 4 பயனாளிகளுக்கு கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை ரூ.48,000 மதிப்பிலும், 5 பயனாளிகளுக்கு முதிர் கன்னி உதவித்தொகை ரூ.60,000 மதிப்பிலும், 11 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட கல்வி உதவித்தொகை ரூ.26,500 மதிப்பிலும்,

5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட திருமண உதவித்தொகை ரூ.54,000 மதிப்பிலும், 6 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட இயற்கை மரண உதவித்தொகை ரூ.1,25,,000 மதிப்பிலும், 46 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் முழுப்புலமும், 29 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனத்திற்கான மானியத்தொகை ரூ.7,20,219 மதிப்பிலும், 194 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனம் பெறுவதற்கான உத்தரவு ஆணைகளும், 21 சுய உதவி குழுக்களுக்கு ரூ.98,60,000 மதிப்பில் கடனுதவி பெறுவதற்கான ஆணைகளும் என மொத்தம் 467 பயனாளிகளுக்கு ரூ.1,25,25,719 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து போக்குவரத்துத்துறை சார்பில் வாரிசு அடிப்படையில் 8 பயனாளிகளுக்கு நடத்துநர்களுக்கான பணிநியமன ஆணைகளை அமைச்சர் கே.ராஜூ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முருகேசன், போக்குவரத்துத்துறை மதுரை மாவட்ட மேலாண்மை இயக்குநர் முருகேசன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய துணைத் தலைவர் ஜெ.ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.