சிறப்பு செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.12.48 கோடி மதிப்பில் 12 புதிய விடுதி கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 30.1.2020 அன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னை, அரியலூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 12 கோடியே 48 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 12 விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிடவும், அவர்தம் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், நல்வாழ்விற்கும், புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல், விடுதிக் கட்டடங்கள் கட்டுதல், கல்வி உதவித் தொகைகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாவட்டம், லேடி வெலிங்டன் வளாகத்தில் 3 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியருக்கான 2 விடுதிக் கட்டடங்கள், அரியலூர் மாவட்டம், சுண்டக்குடியில் 91 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம்,கோயம்புத்தூர் மாவட்டம்,நாயக்கன்பாளையத்தில் 93 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் 91 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம், தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் 83 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடம்,

ராமநாதபுரம் மாவட்டம், திருவரங்கத்தில் 94 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம், ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் 1 கோடியே 80 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவியருக்கான 2 விடுதிக் கட்டடங்கள்,

சிவகங்கை மாவட்டம், இடையமேலூர், வேதியரேந்தல் மற்றும் தமராக்கி ஆகிய இடங்களில் 2 கோடியே 50 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர்களுக்கான 3 விடுதிக் கட்டடங்கள் என மொத்தம் 12 கோடியே 48 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 12 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் சி.காமராஜ், சிறுபான்மையினர் நல இயக்குநர் முனைவர் சீ.சுரேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.