கடலூர்

3698 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் – கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர்

கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் கல்வி பயிலும் 3698 மாணவ, மாணவிகளுக்கு ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் புனித வளனார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கடந்த 2003-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம்தான் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம். இந்த திட்டம் தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த விலையில்லா மிதிவண்டிகள் பள்ளி மாணவி, மாணவர்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகிறது. கழக அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் நிறுத்த முடியாமல் தொடர்ந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் ஆகவே உள்ளன.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் கொண்டு வரப்பட்ட சத்துணவு திட்டம், ஒரு விளக்கு திட்டம், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட மகளிர் காவல் நிலையம், மழைநீர் சேகரிப்பு திட்டம், புதிய வீராணம் திட்டம் ஆகியவை வாழும் திட்டங்களாக வரலாற்றில் பெயர் பொறிக்கப்படும் திட்டங்களாக உள்ளன. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உன்னதமான திட்டம்தான் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா நோட்புக், விலையில்லா ஜாமண்ட்ரி பாக்ஸ் வழங்கும் திட்டம். பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. வேறு எந்த அண்டை மாநிலங்களிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த அளவுக்கு ஒதுக்கப் படுவதில்லை.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் நகர செயலாளர் ஆர்.குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜி.ஜே.குமார், கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ராம.பழனிசாமி, மீனவர் பிரிவு செயலாளர் கே.என்.தங்கமணி, விவசாய பிரிவு செயலாளர் கே.காசிநாதன், கடலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தெய்வ.பக்கிரி, கடலூர் நகர அவைத்தலைவர் ராமச்சந்திரன், நகர துணை செயலாளர் வ.கந்தன், பொருளாளர் தனசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் செல்வ, அழகானந்தம், ராமபுரம் தேவநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கல்யாணி ரமேஷ், தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கே வெங்கட்ராமன், மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.மணி, நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என்.கே.ராஜூ, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், அன்பு, ஏ.கே.எஸ்.சேகர், பிருந்தாசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.