திருநெல்வேலி

அறிவை மிளிர செய்யும் நல்ல கருவி புத்தகம் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேச்சு

திருநெல்வேலி

அறிவை மிளிர செய்யும் நல்ல கருவி புத்தகம் என்று அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கூறினார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் தமிழ் பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தி வரும் நெல்லை புத்தக கண்காட்சி 2020-ஐ ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசியதாவது:-

புத்தகம் என்பது அறிவை மிளிர செய்யக்கூடிய நல்ல கருவியாகும் ஒவ்வொருவரும் புத்தகங்களை தினசரி வாழ்வில் வாசித்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் தேவையான கருத்துகளை உள்வாங்கி வாழ்க்கையிலும் கடைபிடித்தால் தரமான ஒழுக்கமான வாழ்வை பெறலாம். எனவே தான் முதலமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் முதல் பாட வேளை தொடங்கும் போதே பாடப்புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் வழங்கி வருகிறார். இந்த புத்தக கண்காட்சியில் 127 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 100 அரங்குகளில் புத்தகம் மட்டும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.இந்த அரிய வாய்ப்பினை திருநெல்வேலி மாவட்ட மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்து ராமலிங்கம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேச ராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுருபிரபாகரன், துணை ஆட்சியர் அனிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1-ந்தேதி தொடங்கிய இந்த புத்தக கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது.