தற்போதைய செய்திகள்

8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதிக்குள் கையடக்க மடிகணினி – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கிருஷ்ணகிரி

ஏப்ரல் மாத இறுதிக்குள் 8, 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க மடிகணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் கல்லூரியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் முதலாவது 14-வயதிற்குட்பட்ட 32 மாவட்டத்தை சேர்ந்த 8750 பள்ளி மாணவ-மாணவிகள் பங்குபெறும் 12 வகையான போட்டிகளை பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.பிரபாகர், அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் மக்களவை துணை தலைவருமான டாக்டர்.மு.தம்பிதுரை, ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குநர் எம்.வாசு வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

இந்தியாவிற்கே முன்னோடியாக விளையாட்டில் சிறந்து விளங்கிய 507 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.19 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஊக்க தொகையை முதல்வர் வழங்கியுள்ளார். அம்மா அவர்களால் 1992ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கி வைத்தார். அம்மாவின் வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மாநில அளவில் முதலாவது 14 வயத்திற்குட்பட்ட இப்போட்டிகள் நடத்த ரூ.2 கோடியே 63 லட்சத்து 4 ஆயிரம் ஒதுக்கீடு செய்தார்.

மாநில அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிர வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.1,000, இரண்டாம் பரிசாக ரூ.750, மூன்றாம் பரிசாக ரூ.500 வழங்கப்படவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 கோடி, இரண்டாம் பரிசாக ரூ.1 கோடியே 50 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படவுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.30 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.20 லட்சம் வழங்கப்படவுள்ளது. தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.3 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படவுள்ளது.

விளையாட்டு ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் தேசிய அளவில் வெற்றிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.13,000 வழங்கப்படவுள்ளது. கல்வித்துறை சார்ந்த பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க மடிகணினி வழங்கப்படும். 48 லட்சத்து 57 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.