தற்போதைய செய்திகள்

‘கொரோனா வைரஸ்’ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்

சென்னை

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சீனாவில் இருந்து சென்னை வந்துள்ள 8 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். சீனாவில் இருந்து வந்தவர் உள்ளிட்ட 12 பேருக்கு மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டது,. இதில் தமிழ்நாட்டில் யாருக்கும் கொரானோ வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. , அவர்களுக்கு யாருக்குமே காய்ச்சல், இருமல் உள்ளிட்ட மூன்று அறிகுறிகள் இல்லை என்பது சாம்பிள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் 4 சாம்பிள்கள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் முடிவு என்ன என்பது விரைவில் தெரியவரும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கொரானோ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மருத்துவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

இதில் சுயஉதவி குழுக்களும் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஆய்வில் மாணவர்களிடையே கொரோனோ வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனோ வைரஸ் குறித்து வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களை தவிர வேறு எந்த தகவல்களை நம்ப வேண்டாம்.

இ்வ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.