இந்தியா மற்றவை

பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார் பி.வி.சிந்து…

சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் நகரில் நடந்த 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2017 மற்றும் 2018-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்ட சிந்து முதல்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்துள்ளார்.வெற்றிக்கு பிறகு சிந்துவுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உலக சாம்பியன் பட்டம் வென்று திங்கட்கிழமை நள்ளிரவு இந்தியா வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து ஆசிபெற்றார். பிரதமர் மோடி, சிந்துவுக்கு பதக்கத்தை அணிவித்தார்.
தங்கப்பதக்கத்துடன் நாட்டுக்கு பெருமையும் சேர்த்துள்ளதாக பிரதமர் மோடி, சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார். பி.வி சிந்துவை சந்தித்ததில் மகிழ்ச்சி.  அவரது எதிர்கால முயற்சிகளிலும் மிகச்சிறந்து செயல்பட வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து. அப்போது சிந்துவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.