தேனி

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை போல் எந்த நடிகராலும் சாதிக்க முடியாது – எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. பேச்சு

தேனி

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை போல் எந்த நடிகராலும் சாதிக்க முடியாது என்று எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. கூறினார்.

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்திற்குட்பட்ட அனுமந்தன்பட்டியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கம்பம் ஒன்றிய செயலாளர் இளையநம்பி தலைமை தாங்கினார். அனுமந்தன்பட்டி பேரூர் செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். ஒன்றிய அவைத்தலைவர் காமாட்சியப்பன், துணை செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் மார்க்கண்டன், பால்பாண்டி, பொருளாளர் முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் எஸ்.டி.கே. ஜக்கையன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- 

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின் தனது சூழ்ச்சியின் மூலம் கருணாநிதி திமுக தலைவரானார். கணக்கு கேட்டார் என்பதற்காக புரட்சித்தலைவரை கட்சியிலிருந்து நீக்கினார். தன்னை நீக்கியதை பற்றியெல்லாம் கவலைப்படாத புரட்சித்தலைவர் 1972-ல் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக என்னும் தொண்டர்கள் இயக்கத்தை துவக்கினார்.

கழகத்தை நிறுவிய ஆறே மாதத்தில் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் மாயத்தேவர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். 1984 தேர்தலின் போது அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோதும் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்ற அதிமுக அபார வெற்றி பெற்றது. தற்போது பல நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்களால் புரட்சித்தலைவரை போல் சாதிக்க முடியவில்லை.

புரட்சித்தலைவரின் மறைவுக்கு பின் புரட்சித்தலைவி அம்மா கழகத்தை ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்றினார். அவருடைய தலைமையில் கழகம் 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றது. புரட்சித்தலைவியின் சிறப்பான செயல்பாட்டால் 32 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைத்தது கழகம்.

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பின் கழகத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் சிறப்பாக வழி நடத்துகின்றனர். மத்திய அரசின் ஆய்வில் தமிழகம் நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கழக பணியில் உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய பதவிகளை கொடுத்து அழகு பார்ப்பது கழகம் மட்டுமே. தற்போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின், பேரன் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் எல்லாம் இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி பார்த்தனர். ஆனால் அவர்கள் கட்சி தான் நீர்த்து போய் கொண்டிருக்கிறது.

இவ்வாறு எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், அழகுராஜா, விமலேஸ்வரன், நகர செயலாளர்கள் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன், ஜெகதீஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், கே.கே.பட்டி பேரூர் செயலாளர் திருலோகசுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுருளிப்பட்டி ஊராட்சி செயலாளர் ராமு என்ற ராமசாமி நன்றி கூறினார்.