தற்போதைய செய்திகள்

சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான நகரங்கள் பட்டியலில் மதுரை இடம் பெற வாக்களிப்பீர் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்

மதுரை

சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான நகரங்கள் பட்டியலில் மதுரை இடம்பெற வாக்களிப்பீர் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆழ்வார்புரத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வாழ்வாதார அமைச்சகத்தின் மூலம் நகர மக்களின் வாழ்வாதார குறியீடுகளை அளவீடு செய்து உலகளவில் மற்றும் தேசிய வரையறைகளின் தர குறியீட்டுடன் ஒப்பிட உள்ளது. இதை கருத்தில் கொண்டு கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு அரசு துறைகளிடமிருந்து 360 வகையான புள்ளி விவரங்கள் பெறப்பட்டு, மத்திய அரசின் இணையத்தில் பதிவேற்றப்பட உள்ளது.

மதுரை மாநகராட்சி உள்ளிட்ட இந்தியாவில் குறிப்பிட்ட 114 நகரங்களில் வசிப்பவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் நகர வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த மதிப்பீட்டின் மூலம் உள்ளாட்சி அமைப்பு நிர்வாக திட்டமிடவும், செயல்படுத்தவும் மற்றும் உட்கட்டமைப்புக்கு தேவையான முதலீடுகளை ஈர்க்கவும் ஏதுவாக கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, பசுமை மேம்பாடு விவரங்கள், மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள்,

மின் நுகர்வு, மின் இணைப்புகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் தடை, பின்தங்கிய பகுதிகள், நகர சாலைகள், நகர வடிகால்வாய்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நகர குடிநீர் விநியோகம் பற்றிய விவரங்கள். நகர சுற்றுச்சூழல், பொதுப்போக்குவரத்து பேருந்துகள், பேருந்துகளின் எண்ணிக்கை, திறன் மேம்பாட்டு மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், நகர மக்களின் தனிநபர் வருமானம், இயற்கை எரிவாயு, விபத்துகள் காவல்துறை பதிவுகள் தொடர்பான மக்களின் கருத்து பதிவு மென்பொருளை உள்ளடக்கியுள்ளது.

பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பிப்ரவரி 29-ந் தேதி வரை சமூக வலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக் மற்றும் மத்திய அரசின் இணையதளம் Eol2019.org/citizenfeefback ஆகியவற்றில் பதிவு செய்யலாம். மேலும் இதற்கான மொழிக்குறியீடு கட்டத்தை ஸ்கேன் செய்து பங்கு பெறலாம். மேலும் மத்திய அரசின் இணையத்தில் கேட்டப்படும் 24 கேள்விகளுக்கு பதில் அளித்து மதுரை மாநகரை சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்ற நகரங்களின் பட்டியலில் இடம்பெற சிறப்பாக வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

பேட்டியின் போது மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், நகர பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் செந்தில்குமார், உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, உதவி ஆணையாளர்கள் பிரேம்குமார், பழனிச்சாமி, விஜயா, சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல். சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், ராஜ்கண்ணன், வீரன். சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.