சிறப்பு செய்திகள்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கல்வியாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணை திரும்ப பெறப்பட மாட்டாது எனவும், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கவலையடைந்தனர். அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைவரும் தேர்ச்சி பெற்று விடுவார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

5 மற்றும் 8-வது வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றை அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் பெரும் மகிழச்்சி அடைந்தனர். அவர்கள் அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளார்.