தற்போதைய செய்திகள்

சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வேண்டுகோள்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டிலிருந்து இடது மற்றும் வலது புற கால்வாய்களில்  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார்.

இதன் பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சாத்தனூர் அணையிலிருந்து 2019-2020-ம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று சாத்தனூர் அணையிலிருந்து 7543 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே 302.40 மி.க. அடி மற்றும் 453.60 மி.க. அடி ஆக மொத்தம் 756 மி.க. அடிக்கு மிகாமல் 05.02.2020 முதல் 10.03.2020 வரை 35 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும், திருக்கோவிலூர் அணைக்கட்டு பெண்ணையாறு பாசன பழைய ஆயக்கட்டிற்கு 5000 ஏக்கருக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு 1200 மி.க அடி நீரினை நீர்ப் பங்கீடு விதிகளின்படி பிப்ரவரி முதல் தேதி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஒரே தவணையில் தேவைப்படும்பொழுது தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 12,543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.