தற்போதைய செய்திகள்

கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேகம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

கோவை

கோவையில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேக விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

கோவை நகரின் முக்கியமான கோயில்களில் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயிலும் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிசேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பல்வேறு யாகங்களும், வேள்விகளும் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று காலை கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை பிளந்தது.தொடர்ந்து புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதேபோல் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சரவணம்பட்டி கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்பி.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், ஓ.கே.சின்ராஜ், மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவையொட்டி பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.